பல இடங்களில் அரச நிதியில் கட்டப்பட்ட கட்டடங்கள் பாவனையற்ற நிலையில் உள்ளன; புதிய கட்டடங்கள் அமைப்பதை தவிர்த்து, பாவனையற்றுள்ள கட்டடங்களைப் புனரமைத்துப் பயன்படுத்துங்கள். – வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

அரசாங்கத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டுமாயின் சரியான பயனாளிகள் தெரிவு செய்யப்பட வேண்டும். எனவே, பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்களுடன் கலந்தாலோசித்து, அவர்களுடன் இணைந்து உண்மையான பயனாளிகளைத் தெரிவு செய்யுங்கள். அதன் மூலமே இத்திட்டங்களின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளை ஆராயும் விசேட உயர்மட்டக் கூட்டம் இன்று (23.12.2025) செவ்வாய்க்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் ஒவ்வொன்றாக ஆராயப்பட்டபோது, புதிய கட்டடங்கள் அமைப்பதற்கும், புதிய இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கும் நிதி கோரப்பட்டிருந்தது. இதனை அவதானித்த ஆளுநர் அதிகாரிகளுக்குத் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

ஏற்கனவே பல இடங்களில் அரச நிதியில் கட்டப்பட்ட கட்டடங்கள் பாவனையற்ற நிலையில் உள்ளன. புதிய கட்டடங்களை அமைப்பதற்கு நிதியைச் செலவிடுவதைத் தவிர்த்து, பாவனையற்றுள்ள அந்தக் கட்டடங்களைப் புனரமைத்துப் பயன்படுத்துங்கள். அதேபோல, கடந்த காலங்களில் கொள்வனவு செய்யப்பட்டு, பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் இயந்திரங்களை மாற்றிப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுங்கள், என ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

இக்கூட்டத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் கீழ், 2026ஆம் ஆண்டுக்காகத் துறைசார் ரீதியாகத் திட்டமிடப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது:

சமூக சேவைகள் திணைக்களம்: 226 மில்லியன் ரூபா

தொழிற்துறைத் திணைக்களம்: 151 மில்லியன் ரூபா

கூட்டுறவுத் திணைக்களம்: 23 மில்லியன் ரூபா

மேற்படி ஒதுக்கீடுகள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இக்கூட்டத்தில் ஆளுநரின் செயலாளர், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிதி மற்றும் திட்டமிடல்), கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், துறைசார் பணிப்பாளர்கள் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.