மாணவர்கள், எதிர்மறை வட்டத்திலிருந்து வெளியேறி, நேரிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

எமது சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ‘எதையும் எதிர்க்கும்’ மனப்பாங்கில் மாற்றம் ஏற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதிகாரிகளிடம் காணப்படும் எதிர்மறையான போக்குகளும் இந்த சமூக மனோநிலையின் வெளிப்பாடே ஆகும். எனவே, எதிர்காலத்தில் உயர் பதவிகளை அலங்கரிக்கவுள்ள மாணவர்களாகிய நீங்கள், இந்த எதிர்மறை வட்டத்திலிருந்து வெளியேறி, நேரிய சிந்தனையுள்ளவர்களாக உங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியின் நிறுவுனர் தினமும், வருடாந்தப் பரிசளிப்பு விழாவும் இன்று வியாழக்கிழமை (18.12.2025) காலை கல்லூரியின் அதிபர் திருமதி அம்பிகை சிவஞானம் தலைமையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விருந்தினர்கள் பாண்ட் வாத்திய இசை முழங்க அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, சீமாட்டி இராமநாதன் அவர்களின் திருவுருவச் சிலை ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன், ‘கர்மயோகி சீமாட்டி இராமநாதன்’ எனும் சிறப்பு நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

மாணவர்கள் மத்தியில் தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

வீட்டுக்கு அடுத்தபடியாக, நல்லொழுக்கங்களையும் நற்பண்புகளையும் கற்றுக்கொடுக்கும் கேந்திர நிலையங்களாகப் பாடசாலைகளே திகழ்கின்றன. எமக்குக் கற்பித்த ஆசிரியர்கள் எமக்குச் சிறந்த முன்மாதிரிகளாகத் திகழ்ந்தார்கள். அதனாலேயே இன்றும் அவர்களைப் பற்றி நாம் பெருமையுடன் நினைவுகூருகின்றோம்.

இன்றைய காலத்தில் உயர் பதவிகளை வகிப்பவர்களுக்குச் சிறந்த ஆளுமை இன்றியமையாதது. நேரிய சிந்தனை, சக மனிதர்கள் மீதான இரக்கம், பிறருக்கு உதவும் மனப்பாங்கு, மற்றவர்களை மதிக்கும் பண்பு என்பன உயர் பதவியில் இருப்பவர்களுக்கு மிக அவசியமானவை.

மக்களுக்குச் செய்யும் சேவையே கடவுளுக்குச் செய்யும் சேவை என்று சொல்லித்தான் எனது தந்தை என்னை வளர்த்தார். ஆனால், இன்று மக்களுக்குச் சேவையாற்றக் கூடிய உயரிய பதவிகளில் இருப்பவர்கள் சிலர், தங்களுக்குக் கிடைக்கின்ற அந்தப் புனிதமான சந்தர்ப்பங்களைத் தவறவிடுகின்றார்கள் என்பது கவலையளிக்கிறது.

நாளைய தினம் உயர் பதவிகளுக்கு வரப்போகின்றவர்கள் நீங்கள்தான். அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் எந்தவொரு இலக்கையும் அடைய முடியும். அவ்வாறு நீங்கள் எதிர்காலத்தில் பொறுப்பு வாய்ந்த பதவிகளுக்கு வரும்போது, மக்களுக்குச் சேவை செய்யக் கிடைக்கின்ற வாய்ப்புக்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இன்று எமது சமூகத்தில் நல்ல விடயங்களை முன்னெடுப்பவர்களும், நன்மை செய்பவர்களுமே அதிகமாக விமர்சனங்களுக்கு உள்ளாகின்றார்கள். அத்தகைய விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு அதற்கான தகுதி இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகின்றது. இதுவே எமது சமூகத்தின் பழக்கமாகவும் மாறிவருகின்றது. ஆனால், பிள்ளைகளாகிய நீங்களாவது இத்தகைய விமர்சனங்களைக் கண்டு சோர்வடையாமல், அதிலிருந்து மாறுபட்டவர்களாகவும், சமூக மாற்றத்தின் வித்துக்களாகவும் வளர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும், என்றார்.

பிரதம விருந்தினர் உரையைத் தொடர்ந்து, கல்வியிலும் ஏனைய துறைகளிலும் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கு ஆளுநரால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் (பிரதி), விக்டோரியா கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபர் திரு. வரதராஜசர்மா ஸ்ரீகாந்தன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.