“பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னைய நிலையை விட மேலானதாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வேண்டுகோள்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களைத் துரிதமாக இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தது போலவே, எதிர்வரும் ஆண்டில் அவர்களை மீளக் கட்டியெழுப்புவதுடன், முன்னைய நிலையை விடவும் மிகச் சிறந்ததொரு வாழ்வியல் நிலைக்கு அவர்களை உயர்த்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை (17.12.2025) காலை, கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இக்கூட்டத்துக்கு, ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் துறை கௌரவ அமைச்சருமான இ.சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

‘கிளிநொச்சி மாவட்டத்துக்கான இந்த ஆண்டின் இறுதி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இதுவாகும். இன்றைய கூட்டத்தில் சமீபத்திய பேரிடர் பாதிப்புகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தே முன்னுரிமை அளித்து ஆராயவுள்ளோம். அத்தோடு, மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளின் பயன்பாடு மற்றும் அதன் முன்னேற்றங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடவுள்ளோம்,’ என அமைச்சர் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய இணைத்தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான நா.வேதநாயகன் அவர்கள், ‘2025ஆம் ஆண்டு நிறைவடையும் தருணத்தில், யாரும் எதிர்பாராத வகையில் பாரிய இயற்கை அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. ‘டித்வா’ புயலால் ஏற்பட்ட இந்தப் பேரிடர், உயிரிழப்புகளை மட்டுமல்லாது பெரும் சொத்திழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட எமது மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதில் மத்திய, மாகாண வேறுபாடுகளைக் கடந்து எமது அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். இதே உத்வேகத்துடன், சேதமடைந்த உட்கட்டமைப்புகளை மீளக் கட்டியெழுப்பும் பணிகளை அடுத்த ஆண்டில் நாம் முழு வீச்சில் முன்னெடுக்க வேண்டியுள்ளது. அத்தோடு, மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னைய நிலையை விடவும் மேலானதாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்,’ என வலியுறுத்தினார். மேலும், இடர் காலத்தில் உதவிய அனைவருக்கும் அவர் தனது நன்றியையும் தெரிவித்தார்.

டித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, உட்கட்டமைப்பு சேதங்களுக்குச் சில இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத ஆக்கிரமிப்புகளே முக்கிய காரணம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டதுடன், அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

மாவட்டச் செயலகத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் மத்திய, மாகாண திணைக்களங்களின் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டன. மேலும், புதிய திட்டங்களுக்கான அனுமதியும் இக்கூட்டத்தில் கோரப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது.

சட்டவிரோத மணல் அகழ்வு விவகாரம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பில் கிளிநொச்சிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரால் முக்கிய தரவுகள் முன்வைக்கப்பட்டதுடன், இதனைத் தடுப்பதற்கான பொறிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், க.இளங்குமரன், ஜெ.றஜீவன், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், மாகாண மற்றும் மத்திய அமைச்சின் திணைக்களத் தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.