‘1970 – 1980 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் வடக்கின் கூட்டுறவுத்துறை எவ்வாறு செல்வாக்கு செலுத்திச் கோலோச்சியதோ, அதேபோன்று இத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடனும் உளச்சுத்தியுடனும் செயற்பட்டு வருகின்றது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேறுவதற்கு எமது கூட்டுறவு அமைப்புக்கள் தம்மைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார்.
வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி தொடர்பான விசேட ஆலோசனைக் கூட்டம் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (10.12.2025) காலை நடைபெற்றது. இக்கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு ஆளுநர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:
கடந்த 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நான் யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய போது, கூட்டுறவுத்துறையைப் பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். குறிப்பாக, மத்திய அரசாங்கத்திடமிருந்து பெருமளவு நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொடுத்துச் சங்கங்களை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்தேன். ஆனால், எத்துறையை வளர்க்க வேண்டும் என நான் அதிகம் அக்கறை காட்டினேனோ, அத்துறையைச் சார்ந்தவர்களின் செயற்பாடுகள் ‘இவர்களுக்கு இனி உதவிகளைப் பெற்றுக்கொடுக்கக் கூடாது’ என நான் எண்ணும் அளவுக்கு என்னை விரக்தி நிலைக்குத் தள்ளியது. தவறான முகாமைத்துவம் காரணமாகவே கூட்டுறவுத்துறை மீதான மக்களின் நம்பிக்கை இன்று இழக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அரசாங்கத்தின் கூட்டுறவுத்துறை அமைச்சர் எங்களைச் சந்தித்திருந்தார். இதன்போது, கூட்டுறவு தொடர்பான சட்ட விதிகளில் காலத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என நான் கோரிக்கை விடுத்திருந்தேன்.
தற்போது கூட்டுறவுத்துறையில் உள்ள பலர், மக்களுக்குத் தேவையான நேரத்தில் உரிய சேவைகளை வழங்காது, வெறுமனே பதவிகளை வகித்துவிட்டுச் செல்லவே விரும்புகின்றனர். இது தற்போது ஒரு பழக்கமாகவே மாறிவருகின்றது. கூட்டுறவுத்துறையில் மட்டுமல்லாது, எமது அரச சேவையிலும் இந்த மனோபாவமே காணப்படுகின்றது. ‘வேலை செய்தால் தானே பிரச்சினை வரும், வேலையே செய்யாமல் இருந்துவிட்டுச் சென்றுவிடலாம்’ என நினைக்கின்றனர்.
ஏதாவது விடயத்துக்குப் பொறுப்பாகக் கையெழுத்திட்டால், தமது ஓய்வூதியம் பறிபோய்விடும் எனக் காரணங்களைக் கூறிக்கொண்டு, மக்களுக்கான அவசியமான திட்டங்களை மேற்கொள்ளாது பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தட்டிக் கழிக்கின்றனர். நாம் நேர்மையாகச் செயற்பட்டால் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. அவ்வாறு பொறுப்பெடுக்க முடியாவிட்டால் அடுத்தவர்களுக்கு வழிவிட்டுச் செல்ல வேண்டும், என்றார்.
இதனைத் தொடர்ந்து, ஆளுநரின் ஆலோசனைக் குழுத் தலைவரும் மூத்த விரிவுரையாளருமான அகிலன் கதிர்காமர் கருத்துத் தெரிவிக்கையில்;
‘இன்றைய கலந்துரையாடலில் பிரதானமாக இரண்டு விடயங்களை ஆராயவுள்ளோம். ஒன்று, தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தச் சூழலில் உடனடித் தீர்வாக கூட்டுறவுத்துறை எவ்வாறு செயற்படலாம் என்பது குறித்தும், மற்றையது நீண்டகால நோக்கில் கூட்டுறவுத்துறையின் அபிவிருத்தி குறித்தும் ஆராயவுள்ளோம்.
தற்போதைய அரசாங்கம் கூட்டுறவு இயக்கத்தைச் சீர்திருத்துவதற்காக நிபுணர் குழுவொன்றை அமைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றது. அந்தக் குழுவில் நானும் ஓர் உறுப்பினர் என்ற வகையில், அரசாங்கத்தின் முயற்சிகளை நன்கு அறிவேன். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 1000 உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இதில் வடக்கில் எத்தனை உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்களை நாம் உருவாக்கப் போகின்றோம் என்பது எங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது’ எனக் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சபைகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.









