“மக்களின் துயர் துடைப்பதே முதற்பணி; அதிகாரிகளே தற்துணிவுடன் களமிறங்குங்கள்” – அபிவிருத்தி மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த வடக்கு ஆளுநர் அதிரடி உத்தரவு

வடக்கு மாகாணத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்குக் கரங்கொடுத்து, அவர்களை மீட்டெடுத்து வாழ்வாதாரத்தை உறுதி செய்வது எமது தார்மீகப் பொறுப்பாகும். பாதிக்கப்பட்ட மக்கள் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்புவதை உறுதி செய்யும் அதேவேளை, மாகாணத்தின் வருடாந்த அபிவிருத்தித் திட்டங்களையும் எவ்வித தாமதமுமின்றித் துரித கதியில் நிறைவு செய்ய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் அனைத்துத் திணைக்களத் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுடனான அவசர உயர்மட்டக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (08.12.2025) காலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கலந்துரையாடலில் உரையாற்றிய ஆளுநர், ஒவ்வொரு மாவட்டமும் வௌ;வேறு விதமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. குறிப்பாக உடைப்பெடுத்த குளங்களை அண்மித்த பகுதிகளில் மக்கள் மிகப்பெரிய இழப்புகளைச் சந்தித்துள்ளனர். பாதிக்கப்பட்ட அனைத்துப் பிரதேசங்களிலும் இயல்பு நிலையைத் துரிதமாக ஏற்படுத்த வேண்டும் என்பதே மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் உறுதியான வலியுறுத்தலாகும்.

அதிகாரிகள் தற்துணிவுடன் செயற்பட வேண்டும். உங்களிடம் நேர்மை இருக்குமாயின், எதற்கும் அஞ்சத் தேவையில்லை. துணிந்து முடிவுகளை எடுங்கள். உங்களின் தயக்கத்தாலோ அல்லது தற்துணிவின்மையாலோ மக்களுக்கான சேவைகள் ஒருபோதும் தாமதமடையக்கூடாது, எனச் சுட்டிக்காட்டினார்.

விவசாய மற்றும் கால்நடை இழப்பீடுகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஆளுநர், ‘பாதிக்கப்பட்ட மக்கள் தமது இழப்புக்களைப் பதிவு செய்ய அலுவலகங்களுக்கு வரும்வரை காத்திருக்க வேண்டாம். நீங்களே நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுப் பதிவுகளை மேற்கொள்ளுங்கள். அத்துடன், மீள் விதைப்புச் செய்யக்கூடிய இடங்களில் அதற்கான உடனடி நடவடிக்கைகளை முன்னெடுங்கள்.

நிதியை விடுவிப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. அரச சுற்றறிக்கைகளுக்கு அப்பால் வடக்கு மாகாணத்துக்கு விசேட நிதியுதவி தேவைப்படின், அதனைக் கோருவதற்கும் நாம் தயாராக உள்ளோம். வாழ்வாதாரங்களை இழந்து நிர்க்கதியாகி நிற்கும் மக்களை மீளக்கட்டியெழுப்புவது நம் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும், என்றார்.

விவசாயம் மற்றும் கால்நடைத் துறை சவால்கள் இதன்போது கருத்துத் தெரிவித்த விவசாய அமைச்சின் செயலாளர், வெள்ளம் காரணமாக வயல் நிலங்களில் குவிந்துள்ள வீதி எச்சங்களை அகற்றுதல், மீள் விதைப்புச் செய்வதிலுள்ள சிக்கல்கள் மற்றும் பயிர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்த் தாக்கங்கள் குறித்தும், அதனால் எதிர்காலத்தில் விளைச்சல் குறையக்கூடிய அபாயம் குறித்தும் விளக்கமளித்தார்.

அதேவேளை, கால்நடைகளுக்கான தொடர் சிகிச்சை முகாம்கள் நடத்தப்படுவதாகவும், மருந்துகள் இலவசமாக வழங்கப்படுவதாகவும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் தெரிவித்தார்.

மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் பேரிடரால் ஏற்பட்ட பின்னடைவுகள் குறித்தும் ஒவ்வொரு அமைச்சு ரீதியாக ஆராயப்பட்டது. பௌதீக ரீதியாக வேலைகள் முடிவுற்ற போதிலும், சிட்டைகள் வழங்கல் தாமதத்தால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அனர்த்தத்தால் ஏற்பட்ட விரிவான இழப்பீட்டு மதிப்பீட்டை ஜனாதிபதி செயலகத்துக்கு விரைவாக அனுப்பி வைக்குமாறும் ஆளுநர் இதன்போது பணித்தார்.

இக்கலந்துரையாடலின் நிறைவில், வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவால் வடிவமைக்கப்பட்ட, முறைப்பாடுகளை இலகுவாக முன்வைப்பதற்கான புதிய செயலி ஆளுநரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.