வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அண்மையில் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிடுவதற்கும், ‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் கீழான நடமாடும் சேவையில் கலந்து கொள்வதற்கும் நேற்று வெள்ளிக்கிழமை (05.12.2025) முல்லைத்தீவு மாவட்டத்துக்குப் பயணம் மேற்கொண்டார்.
உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, தூய்மை இலங்கை செயலகம், மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், ‘தூய்மை இலங்கை – ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு’ என்ற தேசிய திட்டத்துக்கு அமைய ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் நடைபெற்ற நடமாடும் சேவைகள் மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டங்களிலும் ஆளுநர் பங்கேற்றார்.
இதன்போது, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் மற்றும் வீடுகளைத் துப்புரவு செய்வதற்கான அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காசோலைகள் என்பனவற்றையும் ஆளுநர் வழங்கி வைத்தார். அத்துடன், சமூகசேவைகள் திணைக்களம் ஊடான விசேட உதவிகளும் பொதுமக்களுக்கு ஆளுநரால் கையளிக்கப்பட்டன.
மேலும், பேரிடரால் பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்புக்களை ஆளுநர் நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒட்டுசுட்டான் – புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் உடைப்பெடுத்த பேராறு பாலம், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் உடனடியாகச் சீர்செய்யப்பட்டு போக்குவரத்து வழமைக்குக் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், ஆளுநர் அதனை நேரில் சென்று பார்வையிட்டார்.
அத்துடன், நாயாற்றுப் பாலம் ஊடான தொடர்பு துண்டிக்கப்பட்டதால் மாவட்டத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொக்கிளாய் மக்களையும் ஆளுநர் நேரடியாகச் சென்று சந்தித்து அவர்களது நிலைமைகளைக் கேட்டறிந்தார். வெலிஓயா பிரதேச செயலர் பிரிவில் பேரிடரால் பாதிக்கப்பட்ட வீதிகளையும் அவர் நேரில் ஆய்வு செய்தார்.
ஆளுநரின் இந்தக் களப்பயணத்தின்போது முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், மாவட்ட இடர்முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.








