கிராமிய அபிவிருத்தித் திணைக்களம் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ, அந்த இலக்கை இன்னமும் முழுமையாக அடையவில்லை – ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தெரிவித்தார்

கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தை காலம் கடந்த அல்லது செயலிழந்த ஒரு திணைக்களமாகத் தொடர்ந்தும் அடையாளப்படுத்துவதைத் தவிர்த்து, அதனை மாற்றியமைக்கத் தூரநோக்குடன் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் பாராட்டத்தக்கவை. இம்முயற்சிகள் வெறும் ஆய்வுகளோடு நின்றுவிடாமல் செயல்வடிவம் பெற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில், ‘வடக்கு மாகாண கிராமிய வளர்ச்சியின் எதிர்காலம்’ எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடலும், அது சார்ந்த ஆய்வின் வெளியீட்டு நிகழ்வும் நேற்று வெள்ளிக்கிழமை (05.12.2025) கைதடியிலுள்ள மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி கஜானி பார்த்தீபன் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்;

கிராமிய அபிவிருத்தித் திணைக்களம் பொதுமக்களுக்குப் பயனளிக்கக்கூடிய வகையில் தன்னை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். இத் திணைக்களம் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ, அந்த இலக்கை இன்னமும் முழுமையாக அடையவில்லை என்பதே யதார்த்தம்.

நான் பிரதேச செயலாளராகவும், மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றிய காலங்களில் கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் பல உத்தியோகத்தர்களுடன் பணியாற்றியுள்ளேன். அவர்களில் மிகச் சிலரே தமது கடமைகளுக்கு அப்பால் சென்று, மக்களுக்கான சேவைகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்தனர். இதனாலேயே இத் திணைக்களத்தின் செயற்பாடுகள் முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.

தற்போதைய காலச் சூழலுக்கு ஏற்ப மக்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு திணைக்களம் செயலாற்ற வேண்டும். இவ்வளவு அதிகமான ஆளணியைக் கொண்டிருந்தும், மக்களிடத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் இருப்பது ஏற்புடையதல்ல.

பல கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் மாதர் கிராமிய அபிவிருத்திச் சங்கங்களில் நிதி இருப்பில் உள்ளது. எனினும், அப் பணம் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே, குறுகிய சிந்தனை வட்டத்திலிருந்து விடுபட்டு, மக்களின் மேம்பாட்டுக்காகவும், இத் திணைக்களம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை அடைவதற்காகவும் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும், என்றார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தலைமையிலான ஆய்வுக் குழுவினர், கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் பல தரப்புக்களையும் சந்தித்துக் கலந்துரையாடி, திணைக்களத்தின் நீண்டகால நோக்குத் தொடர்பான இந்த ஆய்வை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மற்றும் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்) உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.