இடர் காலத்தில் மக்களுக்கு உதவுவதற்கு முன்வராத கூட்டுறவு சங்கங்கள் இயங்குவதில் அர்த்தமில்லை – கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் சீற்றம்

இயற்கைப் பேரிடரால் மக்கள் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கும் இக்கட்டான நேரத்தில், அவர்களுக்கு உதவுவதற்கு முன்வராத கூட்டுறவுச் சங்கங்கள் இயங்குவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. அவ்வாறான சங்கங்கள் கடைகளை இழுத்து மூடிவிட்டுச் செல்லலாம், என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புகள் மற்றும் தேவைகளைக் கண்டறிவதற்கான விசேட கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (01.12.2025) பிற்பகல் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே ஆளுநர் தனது அதிருப்தியை வெளியிட்டார்.

இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு கடந்த இரண்டு தினங்களாகக் கூட்டுறவுச் சங்கங்களை அணுகியபோதும், அவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. அவர்கள் விநியோக நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கப் பின்னடிக்கிறார்கள், எனச் சுட்டிக்காட்டினார்.

இதனைக் கேட்ட ஆளுநர், மக்களுக்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மக்கள் துயர்ப்படும்போது உதவாவிடில் எதற்காக இருக்கின்றன? எல்லோரும் தங்களைத் தாங்களே பெரிதாக நினைத்துக்கொள்கிறார்களே தவிர, மக்களின் நலன் மீது அக்கறை கொள்வதில்லை, எனச் சினந்துகொண்டார்.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களினதும் உடனடி மற்றும் நீண்டகாலத் தேவைகள் குறித்து இக்கூட்டத்தில் தனித்தனியாக ஆராயப்பட்டது.

வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகள், மதகுகள் மற்றும் மின்சார விநியோகக் கட்டமைப்புகளை உடனடியாகச் சீர்செய்ய வேண்டும்.

பேரிடரால் விவசாயப் பயிர்கள் பெருமளவில் அழிவடைந்துள்ளன. எனவே, வயல் நிலங்களில் மீள் பயிரிடல் மற்றும் வீட்டுத் தோட்டச் செய்கை ஆகியவற்றில் ஈடுபட விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்தினதும் முன்னுரிமை அடிப்படையிலான தேவைகளைப் பட்டியலிட்டு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் ஒருங்கிணைந்து இப்பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும் ஆளுநர் உத்தரவிட்டார்.

வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் வடக்கின் ஐந்து மாவட்டங்களினதும் மாவட்டச் செயலாளர்கள் இணையவழியிலும் கலந்துகொண்டனர்.