வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை – 27.11.2025

வடக்கு மாகாணத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட 54 மிகப் பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்களில், இன்று வியாழக்கிழமை (27.11.2025) மாலை 6.00 மணி நிலவரப்படி 21 குளங்கள் வான்பாயும் நிலையில் உள்ளதாக வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் எந்திரி த.இராஜகோபு தெரிவித்தார்.

வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, குளங்களின் நீர்மட்ட விவரங்கள் பின்வருமாறு:

வான் பாயும் நிலையிலுள்ள குளங்கள்: 21
75%- 100% கொள்ளளவில் உள்ளவை: 07
50% – 74% கொள்ளளவில் உள்ளவை: 07
25% – 49% கொள்ளளவில் உள்ளவை: 12
25% இலும் குறைந்த கொள்ளளவில் உள்ளவை: 05

இதேவேளை, மாகாணத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களான இரணைமடு குளம் 37.13% கொள்ளளவையும், வவுனிக்குளம் 42% கொள்ளளவையும், முத்துஐயன்கட்டுக்குளம் 48% கொள்ளளவையும் கொண்டுள்ளன.

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள போதிலும், வவுனியா பகுதியில் இன்று காலை 7.00 மணி முதல் அதிகபடியான மழைவீழ்ச்சியாக 163 மி.மீ பதிவாகியுள்ளது. வவுனியா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 172 மி.மீ மழைவீழ்ச்சியும், சேமமடுவில் 58 மி.மீ மழைவீழ்ச்சியும், முல்லைத்தீவு தண்ணிமுறிப்பில் 101 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

இந்த அதிகளவான மழைவீழ்ச்சி காரணமாக, வவுனியா மாவட்டத்திலுள்ள பம்பைமடு நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்தது. இதன் உயர் வெள்ள மட்டமானது (அதிகூடிய வான் பாயும் அளவு) 16 அங்குலமாக காணப்பட்ட போதும், தற்போதைய அதிக மழையால் 25 அங்குலமாக வான் பாய்ந்தது. இதனால் குளம் உடைப்பெடுக்கும் அபாயத்தைக் குறைப்பதற்காகவும், குளத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வான் வழிவாய்க்காலுக்கான தடுப்பணையின் ஒரு பகுதி வெட்டப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், வவுனியா மாவட்டத்தின் அலியாமருதமடு குளம் 10 அங்குல அளவிலும், கல்மடு குளம் 1 அடியும் வான் பாய்வதுடன், முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நீர்ப்பாசனத் திட்டங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக திணைக்களத்தின் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என நீர்ப்பாசனப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.