இலங்கையில் 10 முக்கிய நகரங்களை அபிவிருத்தி செய்யும் விசேட திட்டத்தின்கீழ் உள்வாங்கப்பட்டுள்ள வவுனியா மற்றும் யாழ்ப்பாண நகரங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25.11.2025) நடைபெற்றது.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரச திணைக்களங்கள் ஆகியனவற்றின் முழுமையான இணக்கப்பாட்டுடனேயே இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என இதன்போது குறிப்பிட்டார்.
வவுனியா மாவட்டத்துக்காக நகர அபிவிருத்தி அதிகார சபையால் தயாரிக்கப்பட்ட திட்ட வரைவு, வவுனியா மாவட்டத்தின் தொடர்புடைய தரப்பினர்களின் பங்கேற்புடன் நேற்றைய தினம் முன்வைக்கப்பட்டது. அந்த ஆலோசனைகளின் அடிப்படையில், வவுனியா நகரில் முன்னெடுக்கப்பட வேண்டிய 4 முக்கிய விடயங்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டன. அதற்கான ஒப்புதல் ஆளுநரால் வழங்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. இத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் நிதி ஒதுக்கீட்டுக்கு அமைவாக, உடனடியாக முன்னெடுக்கக்கூடிய திட்டங்கள் எவை என்பது குறித்தும் அடையாளங்காணப்பட்டது.
அத்துடன், யாழ்ப்பாண வர்த்தகத் தொகுதி அபிவிருத்தி தொடர்பில் தனியான கோரிக்கையொன்றை அமைச்சுக்கு முன்வைக்குமாறும் அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கினார்.
இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாநகர சபையின் மேயர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ். மாவட்டச் செயலர், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்), உள்ளூராட்சி ஆணையாளர், காணி ஆணையாளர், யாழ். மற்றும் வவுனியா மாநகர சபைகளின் ஆணையாளர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையினர், வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.






