2026 இல் மத்திய அமைச்சுக்களின் நிதிகள் நேரடியாக மாகாண சபைக்கு விடுவிக்கப்படக்கூடிய சூழல் உள்ளதால், மக்களுக்குத் தேவையான திட்டங்களை முற்கூட்டியே தயாரிக்க வேண்டும். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்

வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு துறைக்குமான ஒருங்கிணைந்த மற்றும் நீண்டகால நிலைத்திருப்புக்கான அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பது தொடர்பான முன்னோடிக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று திங்கட்கிழமை (24.11.2025) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் உரையாற்றிய ஆளுநர் அவர்கள்,

‘தேசிய திட்டமிடல் திணைக்களம், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் மற்றும் தேசிய வரவு–செலவுத் திட்டத் திணைக்களம் ஆகியவற்றின் பணிப்பாளர் நாயகங்கள் அடுத்த மாதம் வடக்குக்கு வருகை தரவுள்ளனர். வெளிநாட்டு நிதி வழங்குனர்கள் நிதியை வழங்குவதாகத் தெரிவித்த பின்னர் திட்டங்களை இனங்காண்பதை விட, எமது மக்களுக்குத் தேவையானவற்றை அடிப்படையாகக் கொண்டு நாமே திட்டங்களைத் முற்கூட்டியே தயாரிக்க வேண்டும்.

2026ஆம் ஆண்டு மத்திய அமைச்சுக்களின் நிதிகள் நேரடியாக மாகாண சபைக்கு விடுவிக்கப்படக்கூடிய சூழல் உள்ளதால் இது அவசியமானது. அத்துடன், மேற்படி மூன்று திணைக்களங்களினதும் அனுமதியைப் பெற்றிருப்பது எதிர்காலச் செயற்பாடுகளுக்குப் பேருதவியாக அமையும், என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனைக் குழுவின் தலைவரும் மூத்த விரிவுரையாளருமான கலாநிதி அகிலன் கதிர்காமர்,

‘கொழும்பில் பிரதி நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் நான் பங்கேற்றிருந்தேன். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கென விசேட திட்டங்களைத் தயார் செய்யுமாறு ஜனாதிபதியும், பிரதி நிதியமைச்சரும் பணிப்புரை விடுத்துள்ளனர். இதற்கான அறிவுறுத்தல் திறைசேரி அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்கள் ஊடாக வடக்கு மாகாணத்திற்கு நிதி கிடைக்கப்பெறவுள்ளது. எனவே, இறக்குமதியைக் குறைக்கக்கூடிய மற்றும் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பொருத்தமான திட்டங்களை, உரிய தரப்புக்களின் ஆலோசனைகளுடன் தயாரித்து வைத்திருப்பது சிறந்தது’ என்று சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட திட்ட அலுவலகங்கள் (Project Offices) ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பான தகவல்கள், மாகாணத்தின் உரிய திணைக்களங்களுக்குச் சரியாகப் பகிரப்படவில்லை என்றும், இதனால் அத்திட்டங்களின் நீண்டகால நிலைத்திருப்பு கேள்விக்குறியாகியுள்ளதையும் சுட்டிக்காட்டினர். எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விடயம் தொடர்பில், தேசிய திட்டமிடல் மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களங்களின் பணிப்பாளர் நாயகங்களின் வருகையின்போது சுட்டிக்காட்டுவதாக ஆளுநர் உறுதியளித்தார்.

இறுதியாக, ஒவ்வொரு துறைக்குமான திட்டங்களைத் தயாரிப்பதற்குத் தனியான குழுக்கள் அமைக்கப்பட்டு, அதற்கமைவாக நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்), மற்றும் விவசாயம், கால்நடை உற்பத்தி சுகாதாரம், நீர்ப்பாசனம், தொழில், கிராம அபிவிருத்தி ஆகிய திணைக்களங்களின் பணிப்பாளர்கள் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.