“சுற்றுலாத்துறை வளர்ச்சியே வடக்கின் தன்னிறைவுக்கு வழி” – இரு முக்கிய நூல்களை வெளியிட்டு ஆளுநர் நா.வேதநாயகன் உரை

சுற்றுலாத்துறையைத் முறையாக அபிவிருத்தி செய்வதன் மூலம் வடக்கு மக்கள் பொருளாதார ரீதியில் தங்கள் சொந்தக் காலிலேயே உறுதியாக நிற்கும் நிலையை உருவாக்க முடியும். இதற்கான முழுமையான ஒத்துழைப்புக்களை வடக்கு மாகாண நிர்வாகம் வழங்கும். அதேவேளை, இத்துறையின் வளர்ச்சிக்குத் தனியார்த் துறையின் பங்களிப்பும் இன்றியமையாதது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தினால் உருவாக்கப்பட்ட ‘சக்தி அம்மன் வழித்தடங்கள்’ (Goddess Shakthi Trail) மற்றும் ‘சுற்றுலாப் பயண ஒழுங்கு’ (Tourism Itineraries) ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை (20.11.2025) மாலை வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்,

‘இலங்கையின் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக வடக்கு மாகாணம் திகழ்கிறது. எமது அமைவிடம், கலாசாரம், இயற்கை வளங்கள் மற்றும் மத விழுமியங்கள் இதற்குப் பெரும் வலுவூட்டுகின்றன. கடந்த காலச் சவால்களுக்குப் பின்னர், எமது மாகாணம் இப்போது சுற்றுலாத்துறையில் உறுதியானதொரு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது.

‘லோன்லி பிளனெட்’ சஞ்சிகை 2026ஆம் ஆண்டில் உலக அளவில் சுற்றுலா செல்லத் தகுந்த முக்கிய இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை அடையாளப்படுத்தியமை எமக்குக் கிடைத்த பெரும் கௌரவமாகும். இது வடக்கு மாகாணத்தின் தனித்துவத்திற்கும், நாம் முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கும் கிடைத்த சர்வதேச அங்கீகாரமாகும்.

வடக்கு மாகாணத்திற்கு வருகை தருபவர்கள் எங்கு செல்வது, எதைப் பார்வையிடுவது என்பது குறித்து அடிக்கடி கேள்விகளை எழுப்பி வந்தனர். அதற்கான விடையாகவே இந்நூல்கள் அமைந்துள்ளன. இன்று வெளியிடப்பட்ட ‘வடக்கு சுற்றுலாப் பயண ஒழுங்கு’ நூலானது, உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாவிகளுக்கு முறையான மற்றும் தகவல்கள் அடங்கிய வழிகாட்டியாக அமையும். அதேபோல, ‘சக்தி அம்மன் வழித்தடங்கள்’ நூலானது, மாகாணத்தில் உள்ள சக்தி ஆலயங்களின் வரலாறு, ஆன்மீகச் சிறப்பு மற்றும் பண்பாட்டு மரபுகளை ஆவணப்படுத்தும் முக்கிய வெளியீடாகும்.

இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில் இராமாயணத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொள்ளும்போது, வடக்கில் இராமாயணத்துடன் தொடர்புடைய 12 முக்கியத் தலங்கள் இருப்பது எமக்குப் பெருமையாகும். இத்தலங்கள் குறித்த விவரங்களும் விரைவில் தனி நூலாக வெளியிடப்படும். இந்தியாவுடனான வான்வழி மற்றும் கடல்வழிப் போக்குவரத்து இலகுவாக்கப்பட்டுள்ள சூழலில், இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க இது உதவும்.

இந்தியத் துணைக்கண்டத்தின் கலாசாரப் பிணைப்பில் வடக்கு மாகாணம் ஒரு முக்கிய புள்ளியாக உள்ளது. எனவே, இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்க இந்தியத் துணைத் தூதரகம் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என நான் இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

சுற்றுலாத்துறை வளர்ச்சியடைவது மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக உயர்த்தும். வேலைவாய்ப்புகள் உருவாகும், சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் புத்துயிர் பெறும். கிராமப்புறப் பொருளாதாரம் மேம்படும். இதுவே வடக்கின் தன்னிறைவுக்கு வழிவகுக்கும், என்றார்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தலைமை அதிகாரி ரம்யா, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் அ.பத்திநாதன், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் மற்றும் மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.