வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றங்களை ஆராயும் கலந்துரையாடல் நடைபெற்றது.

பாரம்பரிய முறையிலான பயிர்ச்செய்கையைவிட நவீன முறையில் அண்ணளவாக இருமடங்கு விளைச்சல் கிடைக்கப்பெறுகின்றது. அதனை விவசாயிகளிடத்தில் ஊக்குவிப்பதில் அடுத்த ஆண்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றங்களை ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை (13.11.2025) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

விவசாய அமைச்சு, விவசாயத் திணைக்களம், கால்நடை அபிவிருத்தித் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவற்றின் முன்னேற்றங்கள் தனித்தனியாகவும் விரிவாகவும் ஆராயப்பட்டன. ஒவ்வொரு திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் காணப்படும் இடர்பாடுகள் குறித்தும் ஆளுநர் தனிப்பட்ட கவனம் செலுத்தினார்.

விவசாய அமைச்சின் கீழ் சமூகக் கூட்டுறவுப் பொறுப்பு நிதி ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் நன்னீர் மீன்பிடி தொடர்பிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. மேலும், விவசாய அமைச்சால் முன்னெடுக்கப்படும் உணவகங்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களால் இயக்கப்படும் உணவகங்களுக்கும் ‘அம்மாச்சி’ என்ற ஒரே பெயர் பயன்படுத்தப்படுவது தொடர்பிலும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். இதுகுறித்து இரு அமைச்சுகளின் செயலாளர்களும் கலந்துரையாடி பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

விவசாயத்துடன் தொடர்புடைய தகவல் திரட்டல்கள் துல்லியமாக இருக்க வேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், அடுத்த ஆண்டுக்குள் இதை உறுதி செய்ய வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் கீழான அபிவிருத்தித் திட்டங்கள் ஆராயப்பட்டபோது, யாழ்ப்பாணத்தின் ஆட்டிறைச்சிக்கான மதிப்பு சுற்றுலா துறைக்கும் முக்கிய பங்காற்றுவதாக ஆளுநர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் இதை மேலும் ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோது, சில ஒப்பந்தக்காரர்களால் திட்ட முன்னேற்றம் எதிர்பார்த்த அளவில் இல்லாதமை குறிப்பிடப்பட்டது. திட்டங்கள் நிறைவடைந்த பின்னரும் சிட்டைகள் ஒப்பந்தக்காரர்களால் வழங்கப்படாமை தொடர்பிலும் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (நிதி), பிரதித் திட்டப் பணிப்பாளர், வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்கள பணிப்பாளர், விவசாயத் திணைக்கள பணிப்பாளர், நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர், கால்நடை அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர், மாவட்ட பணிப்பாளர்கள், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.