வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் பிரதேசங்களுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டியது அவசியமாகும் – கௌரவ ஆளுநர்

உள்ளூராட்சி மன்றங்கள் சேவைகளை வழங்குவதற்கும் மேலாக தங்களது வருமானங்களையும் அதிகரிக்க வேண்டும். அதற்குத் தேவையான திட்டங்களை உருவாக்கி, உள்ளூர் கடன்கள் அபிவிருத்தி நிதியத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

உள்ளூர் கடன்கள் அபிவிருத்தி நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்பாக வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு கிளிநொச்சியில் அமைந்துள்ள முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகில் இன்று வியாழக்கிழமை (13.11.2025) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஆளுநர் அவர்கள் உரையாற்றியபோது, வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் பிரதேசங்களுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டியது அவசியம் எனக் கூறினார். முதலீட்டாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வழங்க வேண்டும். அதேபோன்று ஏற்கனவே முதலீடு செய்தவர்கள் ‘அவர்கள் எங்களுக்கு வரி செலுத்துகின்றனர்’ என்ற அடிப்படையில், அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால் இந்த விடயங்களில் சில உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது சொந்த வருமானத்தின் அடிப்படையிலேயே சபைகளை நிர்வகிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும், அதற்குத் தயாராக தற்போது முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதையும் ஆளுநர் வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறியதாவது, உள்ளூர் கடன்கள் அபிவிருத்தி நிதியத்தை மட்டுமல்லாது, வங்கிக் கடன்கள் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் உதவிகளைப் பற்றிய விழிப்புணர்வு வடக்கு மாகாணத்தில் குறைவாக உள்ளது. இதேநேரத்தில் தென்பகுதியிலிருந்து அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்குக் காரணம் மக்களிடையிலும், எங்களது களநிலை அலுவலர்களிடையிலும் தேவையான விழிப்புணர்வு இல்லாமையாகும்.’

இதை மாற்றும் நோக்கத்துடன், வடக்கு மாகாணத்தில் உள்ளூர் கடன்கள் அபிவிருத்தி நிதியின் செயற்பாடுகளை விரிவாக்கும் வகையில் இவ்விழிப்புணர்வு செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது நிலைத்தாபன அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவையான கடன்களை இந்த நிதியத்திலிருந்து பெற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வில் வரவேற்புரையாற்றிய வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாம்பசிவம் சுதர்சன் அவர்கள், இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றமும் தன்னிறைவான மன்றமாக மாற வேண்டியுள்ளது. அந்த இலக்கை நோக்கிய வருமானமீட்டல் மற்றும் அபிவிருத்திக்கு இவ்வாறான கடன்கள் பெரிதும் உதவியாக இருக்கும், எனக் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண பிரதம செயலாளரும், அபிவிருத்தி நிதியத்தின் உறுப்பினருமான திருமதி தனுஜா முருகேசன் அவர்கள், தென்பகுதியிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் இந்த நிதியத்தின் கடன்களை அதிகளவில் பெற்றுக்கொள்கின்றன. ஆனால் வடக்கிலிருந்து சில மன்றங்களே இதுவரை விண்ணப்பித்துள்ளன, எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் உள்ளூர் கடன்கள் அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் கே.டி.சித்திரபால அவர்கள் நிதியத்தின் செயற்பாடுகள் குறித்து விரிவான விளக்கமளித்தார்.

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், மற்றும் சபைகளின் செயலாளர்கள் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.