சுற்றுலாப் பணியகத்தினருடனான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

2026ஆம் ஆண்டில் சுற்றுலாச் செல்வதற்கான உலகின் மிகச் சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கு வரும் சுற்றுலாவிகள் எந்த எதிர்பார்ப்புடன் வருகிறார்களோ, அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து திருப்தியுடன் திரும்பிச் செல்லும் வகையில் எமது சுற்றுலாத்துறை சார்ந்த சேவைகள் வழங்கப்படவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தினருடனான மாதாந்த கலந்துரையாடல் இன்று (12.11.2025) புதன்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. நிகழ்வுகள், திருவிழாக்கள், கலாசார நிகழ்ச்சிகள், பருவகால நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் 2026ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண சுற்றுலா நாட்காட்டியை உடனடியாகத் தயாரிக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தினார்.

அதேபோல், 2026ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியை தெரிவு செய்து, வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் — மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகளின் ஒத்துழைப்புடன் — உணவுத் திருவிழா, பழத் திருவிழா, மாட்டுவண்டிச் சவாரி போன்ற சுற்றுலாவிகளைக் கவரக்கூடிய நிகழ்வுகளை முன்திட்டமிடலில் அடிப்படையாக ஏற்பாடு செய்யுமாறும், அவற்றை 2026ஆம் ஆண்டுக்கான சுற்றுலா நாட்காட்டியில் உள்ளடக்குமாறும் ஆளுநர் வலியுறுத்தினார்.

இக்கலந்துரையாடலின் போது யாழ்ப்பாண நகரை அழகுபடுத்துதல் தொடர்பிலும் விரிவாகப் பேசப்பட்டது. வீதிகளில் குப்பைகள் மற்றும் கழிவுகளை வீசிச் செல்பவர்களுக்கு எதிராக உள்ளூராட்சி மன்றங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும், சுற்றுலாவிகள் தங்கும் விடுதிகளின் தரத்தை கண்காணிக்குமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.

மேலும், முதல்கட்டமாக டிசெம்பர் மாதம் முதல் வாரத்தில் யாழ்ப்பாண மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பதிவுசெய்யப்படாத விடுதிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பதிவு செய்யாதவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் உத்தரவிட்டார்.

முக்கியமாக, மாகாண சுற்றுலாப் பணியகம் வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டச் செயலகங்களுடனும் இணைந்து செயல்படுவதன் அவசியத்தையும், சுற்றுலாசார் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பல திணைக்களங்களையும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் வலியுறுத்தினார். இதற்கமைய, அனைத்துத் தரப்பினரையும் இணைத்துக் கொண்டு விரைவில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், சுற்றுலாப் பணியக பணிப்பாளர், முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.