மாற்றுத்திறனாளிகளுக்கு வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் திட்டங்களை முன்வைத்தாலும் அதற்கும் நிதி ஒதுக்குவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது. எனவே, அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து பொதுவேலைத் திட்டத்தை வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் (JSAC) ஏற்பாட்டில், இணைந்து ஒளிரும் மலர்கள் (Inclusive Talent Show) நிகழ்வு கொடிகாமம் நட்சத்திர மஹாலில் இன்று செவ்வாய்க்கிழமை (11.11.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,
யாழ். மாவட்டச் செயலராக இருந்த காலத்தில் யாழ். சமூக செயற்பாட்டு மையத்துடன் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றேன். மீள்குடியேற்றப் பகுதிகளில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளேன்.
சமூகப் பிரச்சினைகள் இன்று அதிகரித்துள்ளன. சிறுவர் குழுக்கள் மற்றும் பெண்கள் குழுக்களை அண்மையில் நான் சந்தித்திருந்தேன். எமது சமூகத்தில் நடைபெறும் பல்வேறு விடயங்களையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். நாம் நினைப்பதைவிட மிகமோசமான நிலையில் எமது சமூகம் உள்ளது. தற்போது அரசாங்கம் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளது. வடக்கிலும் அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதை அரசாங்கம் முன்னெடுத்திருக்காவிட்டால் எமது சமூகமே அழிவைத்தான் சந்தித்திருக்கும்.
கைப்பேசிக்கு அடிமையாகும் மாணவர்கள், இளம் பிள்ளைகளால் பல்வேறு பிரச்சினைகள் தினம் தினம் உருவாகின்றன. கைப்பேசி விளையாட்டுக்களால் பணத்தை இழப்பது அதனால் தவறான முடிவெடுத்து உயிர்துறப்பது, ஏமாற்றப்படுவது என்று பல விடயங்கள் நடக்கின்றன. இவை தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும், நாமும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், வரவு – செலவுத் திட்டத்தில் எமது மாகாணத்துக்கு ஒதுக்கப்படும் நிதிக்கு மேலதிகமாகவும் வேறு பல திட்டங்கள் ஊடாக நிதியை ஒதுக்குவதற்குத் தயாராகவே உள்ளது. நாம் பொருத்தமான திட்டங்களை முன்வைத்தால் அந்த நிதியையும் பெற்று எமது மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியும், என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வில், யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் ஆளுநர் சபைத் தலைவரும், யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பீடாதிபதியுமான மருத்துவக் கலாநிதி ரா.சுரேந்திரகுமாரன், யாழ். போதனா மருத்துவமனையின் உள மருத்துவ நிபுணர் எஸ்.சிவதாஸ், யாழ். பல்கலைக்கழக சட்டபீடத்தின் தலைவர் திருமதி கோசலை மதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







