பாத்தீனியம் களை முகாமைக்கு அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமனமும் பயிற்சிவகுப்பும்

1999 ம் ஆண்டின் 35 ம் இலக்க தாவர பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் பாத்தீனியம் களை கட்டுப்பாட்டினை மேற்கொள்வதற்காக தெரிவுசெய்யப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி வகுப்பும் நியமனம் வழங்கும் வைபவமும் வடமாகாண விவசாயத்திணைக்களத்தினால் 2025.11.07 ஆம் திகதி மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் திருநெல்வேலியில் வடமாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி சு.செந்தில்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.ச.சிவஸ்ரீ அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். மேற்படி பயிற்சி வகுப்பில் மேலதிக மாகாண விவசாயப்பணிப்பார் வடமாகாணம், பிரதி விவசாயப்பணிப்பாளர் யாழ்ப்பாணம், விவசாய கண்காணிப்பு உத்தியோகத்தர் யாழ்ப்பாணம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

பயிற்சி வகுப்பானது பிரதான வளவாளராக மத்திய விவசாய அமைச்சினை சார்ந்த திரு.கித்சிறி கேமரத்ன (Attorney at law) மற்றும் விவசாயத்திணைக்களம் தேசிய தாவர பயிர்ப்பாதுகாப்புச்சேவை பேராதனையில் இருந்து வருகை தந்திருந்த, பிரதி விவசாயப்பணிப்பாளர், உதவிவிவசாயப்பணிப்பாளர்கள், மற்றும் உத்தியோகத்தர்களினால் நடாத்தப்பட்டது.

இப்பயிற்சி நெறியில் நீர்பாசனத்திணைக்கள உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கால்நடை அபிவிருத்திப்போதனாசிரியர்கள், கமநலசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் என அறுபத்து நான்கு உத்தியோகத்தர்களுக்கு பயிற்சியளிக்கப்படடு நியமனகடிதமும் வழங்கப்பட்டது.