அடுத்த தலைமுறைக்கு எமது தனித்துவமான பண்பாடு, கலாசாரத்தைக் கையளிப்பதற்று இவ்வாறான பண்பாட்டுப் பெருவிழாக்கள் தேவையாக இருக்கின்றன என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட பண்பாட்டு பேரவையும் இணைந்து நடத்திய பண்பாட்டுப் பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை (24.10.2025), கிளிநொச்சி மாவட்டச் செயலரும், மாவட்ட பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான சு.முரளிதரன் தலைமையில், இரனைமடு தாமரைத் தடாகம் மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கௌரவ கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோர் இரணைமடு கனகாம்பிகை ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து, இரணைமடுச் சந்தியிலிருந்து பண்பாட்டு ஊர்வலத்துடன் விழா மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், தமிழர்களுக்கென தனித்துவமான பண்பாடு – கலாசாரம் உள்ளது. அதிலும் விருந்தோம்பல் என்பது தமிழர்களுக்கென்றே தனித்துவமான பண்பாடு. நாம் இன்று பலவற்றை மறந்து வருகின்றோம். பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கை என்றபோதும் எங்களுக்குரிய தனித்துவங்களை கைவிட முடியாது. அதை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் பொறுப்பு எங்கள் ஒவ்வொருவருக்கும் உரியது.
இன்றைய பண்பாட்டுப் பெருவிழாவில் பிள்ளைகளின் நிகழ்வுகள் சிறப்பாக இருந்தன. நிச்சயம் அவை பாராட்டப்படவேண்டியன. கலைஞர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றிருந்தது. அவர்கள் கலைக்காக ஆற்றும் பணிகளை கௌரவிப்பதுடன் அது அவர்களை இன்னமும் ஊக்கப்படுத்தும் ஒன்றாகவும் இருக்கும், என்றார்.
இந்த நிகழ்வில், தமிழமுதம் அமைப்பின் ஏற்பாட்டில் 46,000 தமிழ்ப் பெயர்கள் அடங்கிய நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், கலைஞர்கள், ஆலயங்களின் வரலாறுகளை உள்ளடக்கி மாவட்டச் செயலக இணையத் தளமும் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









