யாழ். பல்கலைக்கழகம் என்பது வடக்கு மாகாணத்தின் செழுமையான கல்வி மரபை பிரதிபலிக்கும் உயிரோட்டமான சின்னமாகவும், பிராந்திய வளர்ச்சிக்கான இயக்க சக்தியாகவும் விளங்குகிறது. – கௌரவ ஆளுநர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது 50ஆண்டுகளில் அரைவாசிக் காலப் பகுதியை இங்கு மூண்டிருந்த போரினுள்ளேயே கழித்தது. மிகவுப் பயமான – மோசமான அந்தச் சூழலை எதிர்கொண்டு குறுகிய காலத்தில் இலங்கையின் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு நிகராக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. அப்படிப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவன் என்ற ரீதியில் நான் பெருமை கொள்கின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகமாக 1974ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 6ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட உயர்கல்வி நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக இன்று வியாபித்துள்ளது. 50ஆவது ஆண்டைக் கடந்திருக்கும் இப் பல்கலைக்கழகத்தின் 12 பீடங்களும் இணைந்து பொன்விழா நிகழ்வை கைலாசபதி கலையரங்கில் இன்று திங்கட்கிழமை (06.10.2025) துணைவேந்தர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா தலைமையில் கொண்டாடின. இந்த நிகழ்வில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ;ட பேராசிரியர் கபில செனிவிரத்ன பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் ஆளுநர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பது கட்டடங்களும் வகுப்பறைகளும் கொண்ட கல்வி நிலையம் மட்டுமல்ல. அது வடக்கு மாகாணத்தின் செழுமையான கல்வி மரபை பிரதிபலிக்கும் உயிரோட்டமான சின்னமாகவும், பிராந்திய வளர்ச்சிக்கான இயக்க சக்தியாகவும் விளங்குகிறது. ஐம்பது ஆண்டுகளாக, இந்தப் பல்கலைக்கழகம் சமூக, கலாசாரம், அரசியல், அறிவியல், தொழில்நுட்பம் என பல துறைகளில் முன்னேற்றத்தின் தூணாக இருந்து வருகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது இறக்கைகளை விரித்து, கிளிநொச்சியில் புதிய பீடங்களை நிறுவியுள்ளது. இன்று 12 இற்க்கும் மேற்பட்ட பீடங்களுடன், ‘அனைவருக்கும் கல்வி’ என்ற கனவு ஒரு உறுதியாகி பெரும் சமூக மாற்றங்களுக்கான வழியைக் கொண்டுவந்துள்ளது. இது உண்மையிலேயே ஒரு ‘அறிவுத் திருத்தலம்’ ஆக மாறியுள்ளது.

இந்தப் பல்கலைக்கழகம் தன் ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்ற தத்துவத்தை உண்மையில் பூர்த்தி செய்ய, நான் ஒரு சிறப்பு பரிந்துரையை முன்வைக்கிறேன்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கென தனிப்பட்ட பதிப்பகம் ஒன்றை — ‘யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிப்பகம்’ நிறுவுவதை பரிந்துரைக்கிறேன்.

இந்தப் பதிப்பகம், இங்கே உருவாகும் வியப்பூட்டும் அறிவுத்திறனையும் ஆய்வுகளையும் உலகுடன் பகிரும் ஒரு முக்கியத் தளமாக இருக்கும். அதில் ஆராய்ச்சித் தகவல்கள், ஆய்வுக் கட்டுரைகள், அரிய கைப்பிரதிகள் ஆகியவற்றை குறைந்த செலவில் வெளியிட்டு, கல்வி வளங்கள் பல்கலைக்கழகத்தின் சுவற்றைத் தாண்டி பரவச் செய்யலாம்.

அவ்வாறு அறிவு பகிரப்பட்டு நடைமுறையில் பயன்படும் போது தான், ‘அறிவு உண்மையான ஞானமாக’ மாறும். இது மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை நிர்ணயிகள் மற்றும் பொது மக்களுக்கெல்லாம் திறந்த கல்வி வளமாக அமையும் — அதுவே பல்கலைக்கழகத்தின் சமூகப் பங்களிப்பை மேலும் உயர்த்தும்.

அடுத்த ஐம்பது ஆண்டுகள், இந்தப் புகழ்பெற்ற மரபின் மீது கட்டப்பட்ட இன்னும் வலிமையான அத்தியாயங்களாக அமையட்டும் என இன்று நாம் உறுதிமொழி எடுக்கலாம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்றும் ஒளி பாயும் விளக்காக இருந்து, அறிவை வளர்த்திடும், புதுமையை ஊக்குவிக்கும், நம் தாய்நாட்டின் முன்னேற்றத்தை வழிநடத்தும் துறையாகப் பிரகாசிக்கட்டும், என்றார்.

பொன்விழா நிகழ்வையொட்டி மலர் வெளியீடும், நினைவு தபால்தலை வெளியீடும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.