மன்னார் மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு 26.09.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையத்தில் மன்னார் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி. பிரியதர்சினி றமணேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட செயலாளர் திரு. க.கனகேஸ்வரன், அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.ச.சிவஸ்ரீ அவர்களும் வடமாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி சு.செந்தில்குமரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும் மேலதிக மாவட்ட செயலாளர்(காணி), பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கால்நடை உற்பத்தி சுகாதாரப் பிரதிப்பணிப்பாளர், கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை உதவிப் பணிப்பாளர், விதைகள் மற்றும் நடுகைப்பொருட்கள் அபிவிருத்தி நிலைய உதவி விவசாயப்பணிப்பாளர் மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயப் பெருமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி. பிரியதர்சினி றமணேந்திரன் அவர்கள் தனது வரவேற்புரையில் விருந்தினர்களை வரவேற்றுக்கொண்டதோடு திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கம் அளித்தார். மேலும் விவசாயிகள் காலநிலை மாற்றங்களை எதிர்கொண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக தமது வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி சு.செந்தில்குமரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் மன்னார் மாவட்டம் நெல் உற்பத்தியில் உற்பத்தி திறன் கூடிய மாவட்டமாக காணப்படுகின்ற போதும் விதைநெல் உற்பத்தி செய்வது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. எனவே விவசாயிகள் இருக்கின்ற வளங்களைப் பயன்படுத்தி அத்தாட்சிப்படுத்தப்பட்ட விதைநெல் உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.ச.சிவஸ்ரீ அவர்கள் கருத்து தெரிவிக்கையில் மன்னார் மாவட்டமானது நெல், சிறுதானியம், நிலக்கடலை போன்ற பயிர்களில் உபரி உற்பத்தியைக் கொண்டுள்ள போதும் மேட்டுநில பயிர்ச்செய்கையில் பின்தங்கி காணப்படுவதாகவும் அவற்றை முன்னேற்றவேண்டிய நிலை காணப்படுவதாகவும் மேலும் விவசாயிகள் விவசாயத்திணைக்களத்தின் உதவியுடன் விவசாயத்தில் புதிய முறைகளைப் பயன்படுத்தி உச்ச விளைச்சலைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மன்னார் மாவட்ட செயலாளர் திரு. க.கனகேஸ்வரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் திட்டமிட்ட விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடாமையால் சில இழப்புக்களை சந்திப்பதால் திட்டமிட்ட பயிர்செய்கையில் ஈடுபடுவதோடு பயிர்களுக்கான நோய்க் காப்பீட்டு திட்;டங்களையும், விவசாயக்கடன் திட்டங்களையும் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். அத்துடன் திட்டங்களினால் வழங்கப்படும் உள்ளீடுகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் உங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி விவசாய நடவடிக்கையில் இம் மாவட்டத்தினை முன்னேற்றுவதுடன் வடக்கு மாகாணத்தின் வளர்ச்சியிலும் பங்களிப்பு செலுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந் நிகழ்வானது நெற் செய்கையாளர்கள், மறுவயற்பயிர் செய்கையாளர்கள், பழமரச் செய்கையாளர்கள், வீட்டுத் தோட்ட செய்கையாளர்கள் மற்றும் பெறுமதி சேர் உற்பத்தியாளர்கள் ஆகியோருக்கு உள்ளீடுகள் வழங்கப்பட்டதுடன் மாவட்ட விவசாயப்பயிற்சி நிலைய முகாமையாளரின் நன்றியுரையுடன் இனிதே நிறைவு பெற்றது.