பாடசாலை மாணவர்களுக்கு இளமையிலேயே இயற்கையை மதித்து – நேசித்து – பாதுகாக்கும் உணர்வை ஊட்டுவதன் ஊடாக எதிர்காலத்தில் இயற்கையை பேணிப்பாதுகாக்கும் சமூகமாக அவர்களை மாற்றும் திட்டத்தை இன்று ஆரம்பித்திருக்கின்றோம். இதைப் பாதுகாத்து எடுத்துச் சென்று அடுத்த தலைமுறையிடம் கையளிக்கும் பொறுப்பும் உங்களுக்கு உள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
தூய்மை இலங்கை வேலைத் திட்டத்தின் கீழ், கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சு ஆகிய இணைந்து, ஹதபிம அதிகார சபை ஊடாக சூழலை நேசிக்கும் உணர்வுபூர்மான தலைமுறையை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘இயற்கையான கற்றல் களம்’ கருத்திட்டத்தின் வடக்கு மாகாண ரீதியான நிகழ்வு முல்லைத்தீவு யோகபுரம் மகாவித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை காலை (02.10.2025) பாடசாலை அதிபர் த.பிறேமசந்திரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் தனது உரையில், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது. 50 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. தேசிய ரீதியான நிகழ்வு மாண்புமிகு பிரதம மந்திரியும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் கொழும்பு இரத்மலானை இந்துக் கல்லூரியில் நடைபெறுகின்றது. ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு பாடசாலையில் சம நேரத்தில் ஆரம்ப நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு அதற்கு அமைவாக உங்கள் பாடசாலை தெரிவு செய்யப்பட்டு நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இன்றைய காலத்தில் இயற்கையை நாம் வகைதொகையின்றி அழித்து வருகின்றோம். நாம் அவ்வாறு செய்வதன் விளைவுகளையும் உடனுக்கு உடனேயே எதிர்கொள்கின்றோம். காலநிலை மாற்றம் என்பது இன்று உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய சவாலாகிக்கொண்டு போகின்றது. நாமும் எப்போது மழை வரும் என்பதைக் கணிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். இதனால் விவசாயத்திலும் பாதிப்பு ஏற்படுகின்றது.
இதனைக் கருத்திலெடுத்தே எமது அரசாங்கம் இன்று பாடசாலை மாணவர்களிடத்தில் இயற்கையைப் பாதுகாக்கும் திட்டத்தை ஒப்படைத்துள்ளது. பச்சை வலயங்களை உருவாக்கவேண்டியது மாணவர்களாகிய உங்களின் பொறுப்பே. இது தனித்து பாடசாலைகளுடன், பாடசாலை மாணவர்களுடன் சுருங்காது. மாணவர்களின் பெற்றோர்கள், சமூகம் என பலரும் பங்களிப்புச் செய்யவேண்டும். பாடசாலைகளில் பச்சை வலயங்களாக தோற்றம் பெறும் அதே காலத்தில் சமூகத்திலும் அவ்வாறானதொரு நிலைமை உருவாகவேண்டும். நாங்கள் அழித்த இயற்கையை மீளுருவாக்கம் செய்யவேண்டும்.
இன்று பிள்ளைகள் நடுகின்ற மரங்களை அவர்களே பேணிப்பாதுகாப்பதற்கும் பரிசுகள் வழங்குவதற்கு முன்வந்துள்ள எஸ்லோன் நிறுவனத்தைப் பாராட்டுகின்றேன். இது பிள்ளைகளிடத்தே மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிக்கும். இன்று நீங்கள் நடுகின்ற மரங்களை 10 அல்லது 15 ஆண்டுகளுக்குப் பின்னர் திரும்பி வந்து பார்க்கும்போது அவை செழித்து வளர்ந்திருந்தால் கிடைக்கின்ற சந்தோசத்தைப்போல வேறு எதிலும் சந்தோசத்தை அடைய முடியாது. இந்தத் திட்டம் ஏனைய பாடசாலைகளிலும் வெகுவிரைவில் விரிவுபடுத்தப்படும், என்றார் ஆளுநர்.
தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நிகழ்வில் உரையாற்றிய பின்னர் பாடசாலை மாணவர்களுடன் சேர்ந்து ஆளுநர் மற்றும் விருந்தினர்கள் மரங்களை நடுகை செய்தனர்.
இந்த நிகழ்வில், கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர், துணுக்காய் மற்றும் முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர்கள், வடக்கு மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர், வடக்கு மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர், மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர், ஹதபிம அதிகார சபையின் தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் வடக்கு பிராந்திய முகாமையாளர், எஸ்லோன் நிறுவனத்தின் பிராந்திய விற்பனை முகாமையாளர் ஆகியோர் பங்கேற்றனர்.