வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், ரஹமா நிறுவனத்தின் ஏற்பாட்டில் அழைத்து வரப்பட்ட சிறுவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (01.10.2025) நடைபெற்றது.
ரஹமா நிறுவனம் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் சிறுவர் உரிமை தொடர்பிலும் பணியாற்றி வருகின்றது. முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர் குழுக்களின் தலைவர்களே ஆளுநருடனான சந்திப்பில் ஈடுபட்டனர்.
போதைப்பொருள் பாவனையால் பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் சிறுவர்களால் ஆளுநருக்கு எடுத்துக்கூறப்பட்டது. பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. பாடசாலை இடைவிலகல் தொடர்பில் மாணவர்கள் தரப்பில் எவ்வாறான நிலைப்பாடுகள் உள்ளன என்பது தொடர்பிலும் ஆளுநருடன் ஆராயப்பட்டது.
ரஹமா நிறுவனத்தின் செயலாளர் நாயகம் உள்ளிட்ட குழுவினரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.