வடக்கு மாகாண மக்கள் நிதி அறிவில் திருப்திகரமாக இருந்தாலும், நிதி நடத்தையில் பின்தங்கியுள்ளனர் – ஆளுநர்

எமது வடக்கு மாகாண மக்கள் அறியாமையால் நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்களிடம் ஏமாறும் போக்கு தொடர்ந்து இருக்கின்றது. இவ்வாறான நிலையில் இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்துள்ள நிதியல் ரீதியான அறிவூட்டும் செயற்பாடு வரவேற்கத்தக்கதும் தேவையானதுமே. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் வட பிராந்திய அலுவலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நிதி அறிவியல் மாத நிகழ்வு, கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள அதன் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (26.09.2025) பிராந்திய முகாமையாளர் திருமதி பகீரதி செந்தில்மாறன் தலைமையில் நடைபெற்றது.

ஆளுநர் தனது அதிதி உரையில், எமது நாடு நிதி உள்ளடக்கத்தில் கணிசமான முன்னேற்றங்களை கண்டுள்ளது. மக்கள் தொகையில் பெரும்பாலானோர் இன்று வங்கிக் கணக்குகளை வைத்திருக்கிறார்கள். இருந்தாலும், 2021ஆம் ஆண்டின் நிதியறிவு கணக்கெடுப்பின் படி, நிதி அறிவு திருப்திகரமான நிலையில் இருந்தாலும், நிதி நடத்தையில் இன்னும் பின்தங்கியிருக்கிறது. இந்த இடைவெளி எம்மால் நிரப்பப்பட வேண்டும். நிதியறிவு என்பது வெறும் பணத்தை நிர்வகிப்பதற்கான அறிவல்ல — அது நல்ல வாழ்க்கைத் தரத்துக்குத் துணைபுரியும் அறிவார்ந்த முடிவுகளை எடுக்கக் கூடிய திறனும் நம்பிக்கையும் ஆகும்.

இலங்கை மத்திய வங்கிக்கு நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் சட்டப்பூர்வ பொறுப்பு உள்ளது. அதற்கான உறுதியான அடையாளமாக, நிதி எழுத்தறிவு வரைபடம் (2024–2028) போன்ற முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் நோக்கம், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறு, நடுத்தர தொழில் முனைவோரிடையே, நிதி அறிவுக்கும் நடத்தைக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து, அதிகாரம் பெற்ற குடிமக்களை உருவாக்குவதாகும்.

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகம் இந்த முயற்சிகளில் முக்கிய பங்காற்றி, பிராந்திய தேவைகளுக்கேற்ப நிகழ்ச்சிகள் மற்றும் இணையவழி கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தி வருகிறது. இன்றைய பின்லிர் எக்ஸ்போ கூட (FinLir Expo) சமூகத்துக்குத் தேவையான சாதனங்கள் மற்றும் அறிவை வழங்கும் உயிரூட்டும் தளமாக அமைகிறது.

இங்கு கிடைக்கும் அனைத்து வளங்களையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுங்கள், அமர்வுகளில் பங்கேற்றுப் பயனடையுங்கள், உங்களுடைய சந்தேகங்கள், வினாக்களை கேளுங்கள். நாம் ஒன்றிணைந்து, கிளிநொச்சியிலும் அதற்கு அப்பாலும் ஒவ்வொரு தனிநபரும் குடும்பமும் நிதி நல்வாழ்வை அடையக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவோம், என்றார்.

இங்கு உரையாற்றிய கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், இலங்கையிலேயே அதிகூடிய நிலையான வைப்புத் தொகை வைத்திருந்தவர்கள் எமது மாகாண மக்களே. நிதியைச் சேமிப்பது தொடர்பிலும், உழைப்புத் தொடர்பிலும் எமது மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். போர்க்காலத்தில் கூட எமது மக்களின் சேமிப்புத்தான் அவர்களைக் காப்பாற்றியது. ஆனால் போரின் பின்னர் நிலைமை மாற்றமடைந்துள்ளது. தற்போது உழைக்கும் பணத்தை முகாமை செய்வதில் தவறிழைக்கின்றனர். தகுதியை மீறிய வாழ்க்கை முறைமைக்கு ஆசைப்பட்டு நுண்நிதி நிறுவனங்களை நாடுவதால் குடும்பங்கள் சீரழிகின்றன. எனவே இதனை அறிவூட்டுவதற்கும் இந்த நிகழ்வு உறுதுணையாக இருக்கும்.

அதேநேரம் இங்குள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் என்பன ஏனைய மாகாணங்களில் பின்பற்றும் நடைமுறையையே எமது மாவட்டத்து விவசாயிகள் மற்றும் தொழில் முயற்சியாளர்களது கடன் கோரிக்கைக்கும் பின்பற்றவேண்டும். அவர்களின் நடைமுறைகளின் இறுக்கம் காரணமாகவே நுண்நிதி நிறுவனங்களை அவர்கள் நாடுகின்றார்கள். எனவே இதனைக் கருத்தில்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன், என்றார்.

இந்த நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய அபிவிருத்தியின் பணிப்பாளர் சதுர ஆரியதாஸவும் கலந்துகொண்டார்.

நிதி அறிவியல் மாதத்தை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கியின் வட பிராந்திய அலுவலகத்தில் இன்றைய தினம் கண்காட்சியும் நடைபெற்றது. அதனை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பார்வையிட்டனர்.