2026ஆம் ஆண்டுக்குரிய திட்டங்களைத் தயாரிக்கும்போது மக்களுடன் கலந்துரையாடி அதனை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுறுத்தினார்.
வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை மாலை (25.09.2025) நடைபெற்றது.
இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் தாக்க மதிப்பீடு அடுத்த ஆண்டு நிச்சயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆளுநர் தனது ஆரம்ப உரையில் குறிப்பிட்டார். திணைக்களங்களால் கட்டடங்கள் தேவை என கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன எனவும் அந்தக் கட்டடங்கள் பின்னர் பயன்பாடின்றி உள்ளமையையும் அவதானிக்க முடிவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் அவ்வாறான நிலைமை ஏற்படக் கூடாது என ஆளுநர் தெரிவித்தார்.
இதன் பின்னர், அமைச்சின் கீழான ஒவ்வொரு திணைக்களங்களினதும் விடயதானங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
அதனைத் தொடர்ந்து நெடுந்தீவில் முன்னெடுக்கப்பட்ட விசேட பொதுச்சுகாதாரத் திட்டத்தின் அறிக்கையும் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் இந்தத் திட்ட முன்னெடுப்பின்போது அவதானிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, திட்டமிடல், மாகாண கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆணையாளர், சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.