வடக்கு மாகாணம் விரைவில் எழுச்சி பெற்ற மாகாணமாக மிளிரும். இந்த அரசாங்கத்தின் காலத்தில் நிச்சயம் இது நடக்கும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
காரைநகர் சீநோர் படகுத்தளத்தின் புனரமைப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு காரைநகர் சீநோர் படகுத்தளத்தில் இன்று வியாழக்கிழமை மாலை (18.09.2025) இடம்பெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
காரைநகர் சீநோர் படகுத்தளத்தின் புனரமைப்பை வடிவமைப்புத் திட்டமும் நிகழ்வில் வைத்து உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய ஆளுநர், நான் சிறுவனாக இருந்த காலத்தில் இந்த சீநோர் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றியதாக கேள்விப்பட்டிருக்கின்றேன். அவ்வளவு தூரம் இந்த நிறுவனம் பிரபல்யமாக இருந்தது. இன்று அதன் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் இந்த நிறுவனம் முன்னரைப்போன்று ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை வழங்கவேண்டும். இந்த அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றது. அத்தோடு தொழிற்சாலைகளையும் மீள உருவாக்கி வருகின்றது. எமது மாகாணத்துக்கு தேவையாக உள்ள வேலை வாய்ப்பும், வருமான மீட்டலும் இதனூடாக கிடைக்கப்பெறும்.
எமது மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கூடுதலான அக்கறையுடன் செயற்படுகின்ற கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் எமது மாகாணத்துக்கு எவ்வாறான உதவிகளைச் செய்யவேண்டும் என்று அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கின்ற கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் ஆகியோர் இருவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எனது நன்றிகளையும் கூறிக்கொள்கின்றேன், என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய கடற்றொழில் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், இந்தத் தொழிற்சாலை எதிர்காலத்தில் மேலும் விரிவாக்கப்படும் என்றும் இந்தத் தொழிற்சாலையில் இந்தப் பிரதேசத்தவர்களுக்கே வேலை வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க உரையாற்றினார். அவர் தனது உரையில், காரைநகர் மிகப்பெரிய செல்வந்தர்களை கொண்ட பூமி என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் இந்தப் பிரதேசத்தில் அவ்வாறான பலர் இப்போது இல்லை. அவர்கள் யாழ்ப்பாணத்துக்கும், வெளிநாடுகளுக்கும் சென்றுவிட்டார்கள். இன்று காரைநகர் சுற்றுலாத்துறையால் அபிவிருத்தியடைந்து வருகின்றது. அப்படியான பிரதேசத்துக்கு இவ்வாறான தொழிற்சாலையின் மீள் ஆரம்பம் என்பது சிறப்பானது. நாம் எப்போது எல்லாவற்றையும் வெளியில் இருந்து கொண்டு வந்து பழக்கப்பட்ட நிலையில், இங்கேயே உற்பத்தி செய்வது என்பது முக்கியமானது, என்றார்.
இந்த நிகழ்வில், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தரசா, ஜெ.றஜீவன் ஆகியோரும், கடற்றொழில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர், கடற்றொழில் நீரியல்வளங்கள் பணிப்பாளர், சீநோர் நிறுவனத்தின் தலைவர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.