கல்லுண்டாய் ஐக்கிய சனசமூக நிலையக் கட்டடம் இன்று வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.

கல்லுண்டாய் குடியேற்ற கிராமமும் ஏனைய இடங்களைப்போல சகல வசதிகளையும் பெற்று எழுச்சியுற்ற கிராமமாக மாறவேண்டும். அதற்காக எல்லோரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்தார்.

கல்லுண்டாய் குடியேற்ற கிராமத்தில், சி.தர்மகுலசிங்கம் மற்றும் அ.யோகராஜா ஆகியோரின் அனுசரணையுடன் சிறுவர் வறுமை நிவாரண நிதியத்தின் ஊடாக கட்டப்பட்ட கல்லுண்டாய் ஐக்கிய சனசமூக நிலையக் கட்டடம் இன்று வெள்ளிக்கிழமை (05.09.2025) வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.

பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் தனது உரையில், நான் யாழ். மாவட்டச் செயலராக இருந்தபோது காணிகள் இல்லாமல் வேறு இடங்களில் காணிகளை ஆக்கிரமித்து வைத்திருந்த மக்களை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடி ஒரு தொகுதியினரை நாவற்குழியிலும் ஏனையோரை இங்கும் குடியேற்றினோம். அப்போது எனது முயற்சிக்கு மேலதிக மாவட்டச் செயலராக இருந்த சு.முரளிதரன், சண்டிலிப்பாய் பிரதேச செயலராக இருந்து திருமதி யசோதா ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்கினர். அமைச்சின் செயலராக இருந்த சிவஞானசோதி ஊடாக பல்வேறு நிதிகளைப் பெற்று இதனைச் செயற்படுத்தினோம். துரதிஷ;டவசமாக மாவட்டச் செயலர் பதவியிலிருந்து நான் ஓய்வு பெற்றமையால் இந்தக் குடியேற்ற கிராமத்துக்கு தொடர்ந்து உதவிகளைச் செய்திருக்க முடியவில்லை.

ஒவ்வொரு மழைக்கும் இந்தப் பகுதி மக்கள் இடம்பெயரவேண்டிய சூழல் இருக்கின்றது. வீதிகள் திருத்தப்பட வேண்டியிருக்கின்றன. மண் நிரப்பப்பட வேண்டியுள்ளது. அத்துடன் சிலருக்கு காணி உரித்தும் வழங்கப்பட வேண்டியுள்ளது. இவற்றை தற்போதைய பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி பொறுப்பெடுத்து எம்முடன் இணைந்து செயற்படுத்துவார். இந்தப் பகுதி மக்கள் சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பு. அதனைச் செய்து தருவோம், என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் மற்றும் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.