பருவகால மழை ஆரம்பமாவதற்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட வெள்ளவாய்க்கால்கள் மற்றும் மதகுகளை துப்புரவு செய்யும் பணிகளை ஆரம்பிக்கவேண்டும். அதேபோல கடந்த ஆண்டு வெள்ள இடர் பாதிப்புக்களை கவனத்திலெடுத்து அவற்றை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற எடுத்த நடவடிக்கைகளைப் போல ஏனைய செயலாளர்களும் செயற்பட வேண்டும் எனவும் ஆளுநர் கோரிக்கை விடுத்தார்.
நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடல் என்பன வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (03.09.2025) நடைபெற்றது.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், அமைக்கப்படும் வீதிகளின் தரம் தொடர்பில் திணைக்களத் தலைவர்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். திணைக்களத் தலைவர்கள் நேரடியாகச் சென்று வேலைத் திட்டங்களை நேரடியாகப் பார்வையிட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மக்களின் தேவைகளின் அடிப்படையில் வீதித் திருத்தங்களை முன்னுரிமைப்படுத்த வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார். மேலும், திணைக்களங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களுக்கு பதிலளிக்க ஒரு மாத காலங்கள் எடுத்துக்கொள்ளும் நிலை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய ஆளுநர் அது தவறான செயற்பாடு எனவும் அன்றன்றே கடிதங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். அத்துடன் திணைக்களத் தலைவர்கள் தங்கள் திணைக்களங்களின் கீழான விவரங்கள் தொடர்பில் விரல் நுனியில் தரவுகளை வைத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், திணைக்களத் தலைவர்கள் மக்களின் மனங்களை வெல்லும் வகையில் தங்கள் சேவைகளை ஆற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
எமது மாகாணத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தியின் எதிர்பார்ப்பும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும் என்பதே என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அதனை விடுத்து கட்டடங்கள் கட்டுவதாலோ அல்லது வீதிகள் அமைப்பதாலோ மாத்திரம் பயனில்லை என்றும் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்த ஆளுநர், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் செயற்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார். அத்துடன் சோலை வரி மீளாய்வை அனைத்துச் சபைகளும் செய்து முடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் வட்டார ரீதியாக நடத்தப்பட்ட நடமாடும் சேவை முன்மாதிரியான செயற்பாடு எனப் பாராட்டிய ஆளுநர், ஏனைய சபைகளும் அதைப்போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, உள்ளூராட்சி அமைச்சு, உள்ளூராட்சித் திணைக்களம், ஒவ்வொரு மாவட்டத்தினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் அலுவலகம், மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம், வீதி அபிவிருத்தித் திணைக்களம், சுற்றுலா அதிகார சபை, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை என ஒவ்வொரு திணைக்களங்களினதும் ஒவ்வொரு திட்டங்களினதும் முன்னேற்றங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன.
இதன் பின்னர், கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆகியன இணைந்து இந்தச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் ஏற்கனவே ஆராயப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யுத் இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரவுள்ளது. இதன் ஆரம்ப செயற்றிட்டம் நெடுந்தீவில் இடம்பெறவுள்ளதுடன் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நகரங்களில் இதன் ஆரம்ப செயற்றிட்டத்தை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, திட்டமிடல், கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர், மாகாணப் பணிப்பாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் பங்கேற்றனர்.