பிறந்த மண்ணில் வாழ்வதைப்போன்ற சுகம் வேறு எங்கும் எந்த வசதிகளுடன் வாழ்ந்தாலும் கிடைக்காது. 1984ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த நீங்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து இன்று சொந்த மண்ணில் வாழ்கின்றீர்கள். உங்களைப் பார்க்கும்போது சந்தோசமாக இருக்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
கொக்கிளாய் அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலய திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை காலை (29.08.2025) இடம்பெற்றது. மாலையில் ஆலய மலர் மற்றும் இறுவட்டு என்பனவற்றின் வெளியீடுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் அவற்றை வெளியிட்டு வைத்தார்.
இங்கு உரையாற்றிய ஆளுநர், நான் படிக்கின்ற காலத்தில் கொக்கிளாய் மற்றும் ஒதியமலை தொடர்பில் கேள்விப்பட்டிருக்கின்றேன். இந்த மக்களுக்கு 1984ஆம் ஆண்டு காலப் பகுதியில் நடைபெற்ற அநியாயங்களை பத்திரிகைகளில் படித்திருந்தேன். 2010ஆம் ஆண்டு நான் இந்த மாவட்டத்தின் மாவட்டச் செயலராகப் பதவியேற்றவுடன் இந்தக் கிராமங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. இரண்டு கிராமங்களையும் விசேட அனுமதியைப் பெற்றே என்னால் அப்போது சென்று பார்க்க முடிந்தது. கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு இந்தப் பகுதியே பார்க்க முடியாதளவுக்கு இருந்தது.
நான் அப்போது கண்ணிவெடி அகற்றலில் ஈடுபட்ட நிறுவனங்களிடம் மீள்குடியமர்வை துரிதப்படுத்துவதற்கான கோரிக்கையை முன்வைத்தேன். அவர்களும் செய்தார்கள். அதேநேரம் யு.என்.டி.பி. நிறுவனமும் ஒத்துழைத்தது. வீடுகளை கட்டித் தந்தார்கள். இதை முன்னெடுத்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் எனக்கு மன்னாருக்கு இடமாற்றம் வந்தது. கவலையுடன்தான் சென்றேன். மீண்டும் 10 மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டச் செயலராக என்னை நியமித்தார்கள். அதன் பின்னர் மீள்குடியமர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை எனக்குச் செய்யக் கூடியதாக இருந்தது.
பின்னர் யாழ். மாவட்டத்துக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற பதவியிலிருந்து ஓய்வுபெற்றாலும் எனக்கு முல்லைத்தீவு மாவட்டம் தொடர்பில் கூடுதல் அக்கறை இருந்தது. என்னுடன் வேலை செய்த பலர், இங்குள்ள மக்கள் எனப் பலரும் தொடர்பில் இருந்தார்கள். இந்தப் பகுதிகள் தொடர்பில் நான் அடிக்கடிகேட்டுக் கொண்டிருப்பேன்.
எனக்கு இந்த மாவட்டத்துக்கு செய்யவேண்டிய 2 விடயங்கள் தொடர்பில் எப்போதும் அக்கறை இருந்தது. வட்டுவாகல் பாலம் மற்றையது கொக்கிளாய் பாலம். இவை இரண்டும் தொடர்பில் நான் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருந்தேன். 2012ஆம் ஆண்டு கொக்கிளாய் பாலம் அமைப்பதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்தபோதும் அப்போதைய சூழலில் சாத்தியப்பட்டிருக்கவில்லை.
நான் ஆளுநராகப் பதவியேற்றவுடன் அதிமேதகு ஜனாதிபதிக்கு எழுதிய முதல் கடிதம், வட்டுவாகல் பாலப் புனரமைப்புத்தான். எதிர்வரும் 2ஆம் திகதி அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நடுகை செய்யப்படவுள்ளது. இந்த அரசாங்கத்தின் காலத்தில் கொக்கிளாய் பாலமும் அமைக்கப்படும். விரைவில் அதுவும் நடக்கும். அதன் பின்னர் உங்கள் கிராமம் மிகவும் முக்கியமான கிராமமாக மாறிவிடும். இன்னமும் வளம்பெறும், என்றார் ஆளுநர்.