முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் முல்லைத்தீவு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் அவர்கள், பிரதி அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோரின் தலைமையில், முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முல்லைத்தீவு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (29.08.2025) இடம்பெற்றது.

மாவட்டச் செயலரின் வரவேற்புரையை தொடர்ந்து, பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தனது ஆரம்ப உரையில், கொக்கிளாய் புல்மோட்டை முகத்துவாரம் பாலத்தை நிர்மாணிப்பதற்கு அடுத்த ஆண்டு நிதி ஒதுக்கப்படும் எனவும், வட்டுவாகல் பாலத்துக்கான அடிக்கல் எதிர்வரும் 2ஆம் திகதி ஜனாதிபதியால் நடுகை செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து கௌரவ ஆளுநர் அவர்கள் தனது உரையில், கடந்த காலங்களை விட தற்போதைய அரசாங்கத்தால் நடப்பு ஆண்டில் இரண்டு மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை நாம் முழுமையாகச் செலவு செய்யவேண்டும். எதிர்காலத்தில் அரசாங்கத்தால் மேலதிக நிதி ஒதுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருக்கின்றது. எனவே தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியை உரிய காலத்தினுள் உரியவாறு அனைவரும் ஒன்றிணைந்து செலவு செய்யவேண்டும் என வலியுறுத்தினார்.

கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆராயப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைகளின் முன்னேற்றம் மற்றும் மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் விடயங்கள் ஆராயப்பட்டன. இதன் பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதிக்கான திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதனையடுத்து மாவட்டத்தின் முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. கல்வி மற்றும் சுகாதார விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டபோது நீண்ட விவாதங்கள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து பிரதேசமட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டங்களில் நடைபெற்ற விடயங்களில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் முடிவெடுக்க வேண்டிய விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ம.ஜெகதீஸ்வரன், க.திலகநாதன், து.ரவிகரன், ஐ.முத்து மொஹமட் ஆகியோரும், கௌரவ தவிசாளர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்டச் செயலக நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.