வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு மருவிவரும் பாரம்பரிய கலைகளை பாதுகாக்கும் விதமாக பாரம்பரிய கலைச் சங்கமம் எனும் கலை நிகழ்வினை ஆரம்பித்து நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்பாரம்பரிய கலைச் சங்கமமானது இரண்டு நிகழ்வுகளை உள்ளடக்கிய வகையில் கட்டமைக்கப்பட்டிருந்தது.
- பாரம்பரிய கலைத்திறன் வெளிப்பாட்டுப் போட்டி
- பாரம்பரிய கலைநிகழ்வுகளின் சங்கமம்
என்கின்ற இருநிகழ்வுகளும் மிகப்பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தி இருப்பதுடன் சமூக மட்டத்திலான கலைப்பெறுமான அடைவு மட்டங்களுக்கு அதிக பெறுமானத்தினை வழங்கியிருப்பது மறுக்கமுடியாத விடயங்களாகும்.
பாரம்பரிய கலைத்திறன் வெளிப்பாட்டுப் போட்டிகளில் ஷண்முக கௌத்துவம், உடுக்கிசை, பறைஇசை, கரகாட்டம், பாரம்பரிய வாத்திய சங்கமம், கும்மி, கூத்து, இசைநாடகம், தமிழிசை, கிராமியப்பாடல் ஆகிய பதின்னான்கு பாரம்பரியக் கலைகளில் திறன் போட்டிகள் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகில் பதிவு செய்யப்பட்ட கலைமன்றங்கள் இடையே 2025.08.07 திகதி தொடக்கம் 2025.08.18 ஆம் திகதிவரை தினமும் ஒவ்வொரு போட்டியாக நடத்தப்பட்டு மாலை நிகழ்வில் முதலாம் இடம்பெற்ற கலைநிகழ்வு அரங்கேற்றப்பட்டதுடன் போட்டியில் வெற்றிபெற்ற ஏனைய வெற்றியாளர்களுக்கும் சான்றிதழ்களும் பெறுமதியான பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக முதலாம் பரிசு ரூபா 30,000.00, இரண்டாம் பரிசு ரூபா 20,000.00, மூன்றாம் பரிசு ரூபா 15,000.00 மேலதிகமாக இரு ஆறுதல் பரிசுகளாக தலா 10,000.00மும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை கலைமன்றங்களது வினைத்திறனான கலைச் செயற்பாட்டை ஊக்குவிப்பதற்கான அடித்தளமிட்டிருந்தது.
மாலை நிகழ்வாகிய கலைச்சங்கமம் கலை நிகழ்வில் சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம், நல்லூர், ஊர்காவற்றுறை, வேலணை, பருத்தித்துறை, சங்கானை, சாவகச்சேரி, கோப்பாய், தெல்லிப்பளை, கரவெட்டி, மருதங்கேணி, உடுவில் ஆகிய பிரதேசசெயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த கலைமன்றங்களால் ஒருங்கிணைக்கப்பட்ட கலை நிகழ்வுகள் அரங்கேற்றம் கண்டன. இம்மன்றங்களுடாக பாரம்பரியக்கலைகளான சிலம்பாட்டம், காத்தவராயன் கூத்து, இசைநாடகம், நாட்டுக்கூத்து, புரவிநடனம்,பல்லியம், கர்நாடகஇசைக்கச்சேரி என்பவற்றுடன் கிராமிய ஆடற்கலைகளான கரகம், காவடி, கும்மி, ஒயிலாட்டம், உடுக்கை, பக்திகானங்கள், ஆகிய கலை நிகழ்வுகள் சங்கமித்த ஒரு அரங்கமாக இப்பாரம்பரிய கலைச்சங்கமம் நிகழ்வு அமைந்திருந்தமை அனைவராலும் பாராட்டப்பட்ட விடயமாகும்.