மன்னார் மாவட்ட மருத்துவமனைக்கு கௌரவ ஆளுநர் நேரடி விஜயம்

மன்னார் மாவட்ட மருத்துவமனையின் நிலைமைகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வியாழக்கிழமை மாலை (28.08.2025) நேரில் சென்று பார்வையிட்டதுடன் நோயாளர் நலன்புரி சங்கத்தினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனை நோயாளர் நலன்புரி சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஆளுநருடனான சந்திப்பு மன்னார் நகர சபையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் மன்னார் நகர சபையின் கௌரவ தவிசாளர் மற்றும் மன்னார் மாவட்டச் செயலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் மாவட்ட மருத்துவமனை மாகாண சபையிருந்த காலத்திலும் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றும் அதன் பின்னரும் கவனத்தில் கொள்ளப்படவில்லை எனவும் நோயாளர் நலன்புரி சங்கத்தினர் சுட்டிக்;காட்டினர். மிக நீண்ட காலமாக எந்தவொரு அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், மன்னார் மருத்துவமனைக்கு வரவேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் கூட வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டன எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். நிரந்தர மருத்துவ நிபுணர் இல்லாமை மற்றும் ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளமை தொடர்பிலும் அவர்கள் ஆளுநருக்குச் சுட்டிக்காட்டினர். ஆதார மருத்துவமனையாக இருந்து மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டிருந்தாலும் கூட ஆளணியில் எந்தவொரு அதிகரிப்பும் செய்யப்படவில்லை என்றும் தொடர்ச்சியாக தமது மாவட்ட மருத்துவமனை புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இதனால், மத்திய அரசாங்கத்தின் கீழ் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டால் அபிவிருத்தி மற்றும் ஆளணிகள் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டனர். மக்களின் உயிருடன் தொடர்புடைய விடயம் என்பதால் இதில் கவனம் செலுத்துமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

மன்னார் மருத்துவமனையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆளுநராக பதவியேற்ற பின்னர் புறக்கணிக்கவில்லை எனக் குறிப்பிட்ட ஆளுநர், தற்போதுகூட முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மருத்துவமனைகளுக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டிருந்தாகவும் சுட்டிக்காட்டினார். மேலும் ஆளணிப் பற்றாக்குறை என்பது தனித்து மன்னார் மாவட்ட மருத்துவமனைக்கு மாத்திரம் உரியதன்று எனத் தெரிவித்த ஆளுநர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்கூட ஆளணி நிரப்புப்படாமலும், ஆளணி மீளாய்வுக்கு உட்படுத்தப்படாமலும் உள்ளதைச் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்தில் 33 மருத்துவமனைகள் தாதியர்களுக்கான ஆளணி வெற்றிடங்கள் இல்லாத நிலைமை இருப்பதையும் தெரியப்படுத்திய ஆளுநர், இங்குள்ள ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் சாதகமான நிலைப்பாட்டை இது தொடர்பில் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், மன்னார் மாவட்ட மருத்துவமனைக்கு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் மருத்துவ அலகு அமைக்கப்படவுள்ளமை தொடர்பில் இந்தியத் தூதுவர் தெரிவித்துள்ளமையும் ஆளுநர் தெரியப்படுத்தினார்.

இதன் பின்னர் மன்னார் மாவட்ட மருத்துவமனையை ஆளுநர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார். மருத்துவமனையின் குறைபாடுகள் தொடர்பில் மருத்துவமனைப் பணிப்பாளரால் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. மருத்துவமனையின் தேவைப்பாடுகள் தொடர்பில் கவனத்தில் கொள்வதாகத் தெரிவித்த ஆளுநர், மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அடுத்த மாதம் தொடர்புடைய தரப்புக்களை அழைத்து கலந்துரையாடல் நடத்துவதாகவும் இதன்போது உறுதியளித்தார்.