பெண் சாதனையாளர்களுக்கான அரியாத்தை விருது வழங்கும் நிகழ்வு

எங்கள் அரச அலுவலர்களில் பலர் எல்லாவற்றுக்கும் பயந்து, துணிந்து முடிவெடுத்துச் செயற்பட முடியாதவர்களாக அல்லது ஊக்கமில்லாதவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள், இந்தப் பெண் சாதனையாளர்களின் அனுபவப்பகிர்வுகளைக் கேட்டு அவர்களின் துணிவு – பல தடைகளைத்தாண்டி சாதிக்கும் ஆற்றல் என்பவற்றை தெரிந்து கொள்ளவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

பெண் சாதனையாளர்களுக்கான அரியாத்தை விருது வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை (16.08.2028) முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

ஆளுநர் தனது உரையில், எங்களால் செய்ய முடியாததென்று எதுவுமில்லை. மனமிருந்தால் எதையும் செய்யலாம். செய்து முடிக்கலாம். ஆனால் எங்களில் பலருக்கு மனமும் வருவதில்லை. அதற்கான துணிவும் வருவதில்லை. இந்தச் சாதனைப் பெண்கள் அதனை மாற்றியமைத்திருக்கின்றார்கள். இந்தப் பெண்களைப்போன்று ஒவ்வொரு ஊரிலும் இருந்தால் அந்த ஊர் தன்னாலேயே அபிவிருத்தியடைந்துவிடும்.

தலைமைத்துவத்தில்தான் எல்லாம் தங்கியிருக்கின்றது என்பது தொடர்பில் பல தடவைகள் நான் குறிப்பிட்டிருக்கின்றேன். எங்கு தலைமைத்துவம் தவறுகின்றதோ அந்த நிறுவனம் சரிவை நோக்கி பயணிக்கின்றது.

நேர்மையாக இருந்தால் எதற்கும் பயப்பிடத்தேவையில்லை. நேர்மையானவர்களை நோக்கித்தான் விமர்சனங்களும் வரும். சமூக ஊடகங்களில் வரும் விமர்சனங்களுக்கு அஞ்சத் தேவையில்லை. இன்று பலர் நேர்மையற்றவர்களாக இருப்பதால் அவர்கள் ஒன்றுசேர்ந்து நேர்மையானவர்கள் மீது சேறடிக்கின்றார்கள். நேர்மையாக இருப்பவர்கள் இவற்றுக்கு அஞ்சுவதோ, கவலைப்படுவதோ, கவனத்திலெடுப்பதோ தேவையற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் மிகச் சிறந்த நிர்வாகி. அவர் புத்தாக்கமாகச் சிந்தித்து இவ்வாறானதொரு விருது வழங்கலை நடத்துகின்றார். முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சகல வளமும் இருக்கின்றது. ஆனால் வறுமையிலும் முதல் மாவட்டமாக இருக்கின்றது. எங்கள் அதிகாரிகள் கவனமெடுத்தால் இதை மாற்றியமைக்கலாம். தற்போதுள்ள அரசாங்கத்தின் காலத்தில் எமக்கான அபிவிருத்திகளை நாம் முன்னெடுப்பது இலகுவாக இருக்கும்.

இந்த மாவட்டம் உள்ளிட்ட வடக்கில் 4 மாவட்டங்களில் மாவட்டச் செயலராகப் பணியாற்றியிருக்கின்றேன். அப்போது சில அபிவிருத்திகளை என்னால் செய்ய முடியாமல் இருந்தது. எமது மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஆளுநர் பதவியை ஏற்றுக்கொண்டேன். கதிரையில் சும்மா இருந்துவிட்டுச் செல்வதற்கு நான் வரவில்லை. அன்று மாவட்டச் செயலராக இருந்தபோது செய்ய முடியாத சில அபிவிருத்திகள் இப்போது இந்த மாவட்டத்தில் செய்வதற்கு ஏதுவாகி வருகின்றன. இந்த முல்லைத்தீவு மாவட்டம் இன்னும் 10 ஆண்டுகளுக்கு அபிவிருத்தியில் முழுமையடை மாவட்டமாக பரிணமிக்கும் என்ற தளராத நம்பிக்கை எனக்கிருக்கின்றது, என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் கௌரவ விருந்தினராகவும், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன் மற்றும் கிறிசலிஸ் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி அஷpகா குணசேன ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

2025ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் அரியாத்தை விருதை முள்ளியவளையைச் சேர்ந்த எஸ்.அகிலத்திருநாயகியும், சிறந்த பெண் தலைமைத்துவத்துக்கான அரியாத்தை விருதை புதுக்குடியிருப்பைச் சேர்ந்த திருமதி மைக்கல் தியாகராஜா ஜூவராணி புனிதாவும், சிறந்த பெண் தொழில்முனைவோருக்கான அரியாத்தை விருதை துணுக்காயைச் சேர்ந்த திருமதி சத்தியானந்தம் சோபனாவும், சிறந்த பெண் சமூகசேவகருக்கான அரியாத்தை விருதை மாந்தை கிழக்கைச் சேர்ந்த திருமதி விக்னேஸ்வரன் ஜெகதாம்பிகையும், சிறந்த பெண் மாற்றத்தை ஏற்படுத்துவோருக்கான அரியாத்தை விருதை வெலிஓயாவைச் சேர்ந்த திருமதி விமலசேனவும், சிறந்த இளம்பெண் தொழில்முனைவோருக்கான அரியாத்தை விருதை ஒட்டுசுட்டானைச் சேர்ந்த திருமதி கிருசாந் மிதுசாவும் பெற்றுக்கொண்டனர். இவர்களை விட சாதனைப் பெண்கள் பலருக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில், பெண் சாதனையாளர்களின் அனுபவப் பகிர்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.