முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், முல்லைத்தீவு மாவட்ட கல்விக்கும் அபிவிருத்திக்குமான நம்பிக்கை நிதியம், முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க சங்கம் ஆகியன இணைந்து முல்லைத்தீவு மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கு இடையே முதல் தடவையாக நடத்தும், தேசியவீரன் பண்டாரவன்னியனின் ஞாபகார்த்த முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க போட்டி முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை காலை (16.08.2028) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வை தொடக்கி வைத்து உரையாற்றிய ஆளுநர், சதுரங்க விளையாட்டில் ஈடுபடுவதால் கல்விக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. எமது மூளை வளர்ச்சிக்கு இந்த விளையாட்டு உறுதுணையானது. எமது இளையோரை இவ்வாறு விளையாட்டு அல்லது கலைச் செயற்பாடுகளில் ஈடுபட நாம் ஊக்குவித்துக்கொண்டேயிருக்க வேண்டும். எதிர்காலத்தில் அவர்கள் சிந்தனைச் சிதறல்களின்றி பயணிக்க இது உதவும், என்றார்.
இந்த நிகழ்வுக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் தலைமை தாங்கியதுடன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.