‘தூய்மை இலங்கை’ என்ற எண்ணக் கருவின் கீழ், ‘இதயபூர்வமாக யாழ்ப்பாணத்துக்கு’ என்ற தொனிப்பொருளில், விழிப்புணர்வுச் செயலமர்வு வடக்கு மாகாண பேரவைச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

‘தூய்மை இலங்கை’ (Clean Srilanka) என்ற எண்ணக் கருவை ஊக்குவிக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் – நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவுடன் இணைந்ததாக ‘இதயபூர்வமான யாழ்ப்பாணத்துக்கு’ என்ற தொனிப்பொருளில் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாக யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு கைதடியிலுள்ள வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை (14.08.2025) நடைபெற்றது.

வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் ஆளணியும், பயிற்சியும் செ.பிரணவநாதன், உதவி பிரதம செயலாளர் திருமதி அனெற் நிந்துஸா அன்ரனி டினேஸ் ஆகியோர் கலந்துகொண்டு செயலமர்வை ஆரம்பித்து வைத்தனர். பிரதம செயலாளர், தூய்மை இலங்கை திட்டத்தின் நோக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

இதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வை, ஜனாதிபதியின் மூத்த உதவிச் செயலர் திருமதி சாரதாஞ்சலி மனோகரன் நடத்தினார்.

இந்தச் செயலமர்வில், ஜனாதிபதி செயலகத்தின் தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் உதவிப் பணிப்பாளர் (ஊடகம்) நிசாந்த அல்விஸூம், வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகச் செயலாளர் கு.டிலீப்அமுதன், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை மாணவர்களும் கலந்துகொண்டனர்.