காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் 53 ஆண்டுகளாக, காணி உறுதியில்லாமல் வாழ்ந்து வந்த மக்களுக்கு இந்த அரசாங்கத்தின் காலத்தில் விடிவு கிடைத்துள்ளது. வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்களுக்கு முதல் முறையாக இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் வசித்து வரும் யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த 32 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த 300 பேருக்கும் இன்று புதன் கிழமை (13.08.2025) காணி உறுதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
பளை மத்திய கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிதிகள் பாண்ட் வாத்தியத்துடன் விழா மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிகழ்வில், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன கௌரவ அமைச்சர் கே.டி.லால்காந்த, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், பிரதி கௌரவ அமைச்சர் கலாநிதி சுனில் ரணசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தவிசாளர் கே.நிஹால், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் மாவட்டச் செயலர்கள், சாவகச்சேரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் தனது வரவேற்புரையில், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் வசித்த வடக்கு மாகாணத்து மக்களுக்கு முதல் தடவையாக உறுதி வழங்கப்படுகின்றது. அத்துடன் இந்த அரசாங்கத்தின் காணி உரித்து வழங்கும் தேசிய நிகழ்வும் இங்கேதான் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது என்று குறிப்பிட்டார்.
அமைச்சர் இ.சந்திரசேகர் தனதுரையில், வடக்கு மாகாணத்தில் அடையாளப்படுத்தப்படாத காணிகளை அடையாளப்படுத்தி அதனை இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த காணிகள் இல்லாத மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம். மக்களுக்கு காணிகள் இல்லாமல் இருந்த நிலையில், கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்கு கூஜா தூக்கியவர்களுக்கும், அவர்களின் அடிவருடிகளுக்கும் பல ஏக்கர் கணக்கில் காணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதற்கு அதிகாரிகள் சிலரும் உடந்தையாகச் செயற்பட்டிருக்கின்றார்கள். அவ்வாறு சட்டத்துக்கு முரணாக வழங்கப்பட்ட காணிகளை நாம் மீளப்பெற்று மக்களுக்கு வழங்குவோம், என்றார்.
வடக்கு மாகாண ஆளுநர் தனது உரையில், வடக்கு மாகாண மக்களுக்கு இன்று மிக முக்கியமான நாள். 53 வருடங்களாக வழங்கப்படாதிருந்த காணி உறுதி இன்று இந்த மக்களுக்கு கிடைக்கின்றது. இந்த அரசாங்கம் இருந்தமையால்தான் இந்த நடைமுறையும் கூட சரியான முறையில் இடம்பெற்று சரியானவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அதிகாரிகள் எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாம் செய்து முடித்திருக்கின்றார்கள். இந்த மக்கள் நீண்ட காலம் அலைந்து திரிந்தமைக்கு இன்று விடிவு கிடைத்திருக்கின்றது.
காணி சீர்திருந்த ஆணைக்குழுவின் தலைவரை அண்மையில் நாம் எமது அலுவலகத்துக்கு அழைத்து வடக்கு மாகாணத்திலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தோம். அதற்கு அமைவாக பல பிரச்சினைகள் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் தீர்க்கப்படவுள்ளன. ஏனையவர்களுக்கும் விரைவில் உறுதி வழங்கப்படும். ஆனாலும் இன்னமும் பல தேவைகள் உள்ளன. அவையும் படிப்படியாகத் தீர்க்கப்படவேண்டும். காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணிகளில் வசிப்போருக்கு உறுதி வழங்கப்பட்டமை போன்று, ஏனைய அரச காணிகளில் வசிப்பவர்களுக்கும் உறுதிகள் வழங்கப்பட வேண்டும். அந்தச் செயன்முறையும் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும், என்றார்.
அமைச்சர் கே.டி.லால்காந்த தனதுரையில், வனவளத் திணைக்களத்தால் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது. இந்தப் பகுதி மக்களினது மாத்திரமல்ல தெற்கில் அம்பாந்தோட்டை, மொனராகலையிலும் மக்களின் விவசாயக் காணிகளை வனவளத் திணைக்களம் அபகரித்துள்ளதாக அந்த மக்களும் குற்றம் சுமத்துகின்றனர். இந்தப் பிரச்சினைக்கும் நாம் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். விரைவில் அதற்கும் சரியான நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன், என்றார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 50,000 பேருக்கு காணி உறுதிகள் வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 3,000 பேருக்கு வழங்கப்படக்கூடும் எனவும், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் ரி.விமலன் குறிப்பிட்டார்.