வவுனியா வடக்கு வலய கல்வி முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிமனையில் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை (01.08.2025) நடைபெற்றது.
வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளரால், வலயம் தொடர்பான அடிப்படைத் தரவுகள் முன்வைக்கப்பட்டன. அத்துடன் தமது வலயத்தின் பிரதான சவாலாக ஆளணி வெற்றிடம் அதிலும் ஆசிரிய வெற்றிடம் அதிகமாக உள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. வடக்கின் ஏனைய வலயங்களுடன் ஒப்பிடுகையில் ஆளணி வெற்றிடம் அதிகமுள்ள வலயங்களில் ஒன்றாக தமது வலயம் இருப்பதால், ஆளணிகளை வழங்கி உதவுமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார். அத்துடன் வேலையை விட்டு விலகும் ஆசிரியர்களின் சதவீதமும் இங்கு உயர்வாக இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், மாணவர்களின் வரவு ஒழுங்கின்மை அதிகமாக உள்ளதாகவும், மாணவர்கள் பிறப்புச்சான்றிதழ் இல்லாததன்மையும் அதிகமாக உள்ளதாகவும் இவற்றை பிரதேச செயலகத்துடன் இணைந்து ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆளுநரிடம் தெரிவித்தார்.
இதன் பின்னர் கருத்துதுத் தெரிவித்த ஆளுநர், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கல்வி அமைச்சின் செயலாளரால், வவுனியா வடக்கின் எல்லைக் கிராமங்களிலுள்ள பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமை தொடர்பிலும் தொடர்ந்தும் அவ்வாறு பாடசாலைகள் மூடப்படும் அபாயம் நிலவுவது தொடர்பாகவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது என்றும் அதற்கு அமைவாக, அந்தப் பிரதேசத்தின் நிலைமையே நேரடியாக அவதானிப்பதற்காக இந்தக் களப் பயணம் ஒழுங்கமைக்கப்பட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நாங்கள் என்ன விலை கொடுத்தாலும் கல்வியை மேம்படுத்த வேண்டியது அவசியம் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர் அதிபர்களின் தலைமைத்துவத்தில்தான் பாடசாலைகளின் எழுச்சியும், சரிவும் தங்கியுள்ளது எனக் குறிப்பிட்டார். வளப்பற்றாக்குறைகள் இருப்பதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த ஆளுநர், இருக்கின்ற வளங்களை வைத்து முடிந்தளவு சிறப்பான சேவையை வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அத்துடன் ஆசிரியர்களோ, அதிபர்களோ கடமைக்காக வேலையைச் செய்யாமல் விருப்பத்துடன் வேலையைச் செய்தால் மிகச் சிறந்த பெறுபேறுகள் நிச்சயம் கிடைக்கப்பெறும் எனவும் வலியுறுத்தினார். ஆசிரியர்கள் அல்லது அதிபர்கள் எவராக இருந்தாலும் தினமும் இந்தப் பிரதேசத்துக்கு தூர இடத்திலிருந்து வந்து செல்வது பொருத்தமாக இருக்காது எனத் தெரிவித்த ஆளுநர் இங்கு தங்கி நின்று அவர்கள் பணியாற்றும்போதுதான் வினைத்திறனான பெறுபேறுகள் கிடைக்கும் எனக் குறிப்பிட்டார்.
அத்துடன் இன்றைய களப்பயணத்தின்போது பெற்றோர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பிலும் ஆளுநர் இங்கு குறிப்பிட்டார். பாடசாலை வகுப்பறைக்கு வர்ணப்பூச்சு மேற்கொள்வதற்காக பெற்றோர் ஒருவரால் சக பெற்றோர்களிடம் பணம் கோரப்பட்டதாக தனக்கு கிடைத்த முறைப்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பினார். பாடசாலை அதிபர் அவ்வாறான செயற்பாட்டை தான் மேற்கொள்ளவில்லை எனக் குறிப்பிட்டார். ஆனால் பாடசாலைக்குள் நடைபெறுகின்ற பாடசாலையின் பெயரால் இடம்பெறுகின்ற இந்தச் சம்பவங்களுக்கு பாடசாலை அதிபர்களே பொறுப்பு எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், பாடசாலை அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை ஏற்படும் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த தவணையிலிருந்து தவணைப் பரீட்சைக் கட்டணம் அறவிடப்படக்கூடாது எனவும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரிடம் விசேட அனுமதியுடன் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாகவே தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆசிரிய இடமாற்றத்தின்போது வலயக் கல்விப் பணிப்பாளரால் ஆசிரியரை விடுவிப்பதற்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்ட பின்னரும் ஆசிரியர் விடுவிக்கப்படவில்லையாயின் அதிபருக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதிபர் ஒருவருக்கு இன்னமும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்ற விடயத்தையும் வடக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார். ஷ
வவுனியா வடக்கிலுள்ள பல முன்பள்ளிகள் எந்தவொரு அமைப்பினதும் பொறுப்பில் இயங்காமையால், அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாகாணசபையின் கொடுப்பனவு மாத்திரமே வழங்கப்படுவதாகவும் அது போதாது என்பதால் ஆசிரியர்கள் இந்தச் சேவையிலிருந்து விலகுகின்றனர் என்றும் அதனால் பல முன்பள்ளிகள் மூடப்படுகின்றன என்ற விடயமும் முன்பள்ளிக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளரால் முன்வைக்கப்பட்டது. தேசிய ரீதியான இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என நம்புவதாக வடக்கு கல்வி அமைச்சின் செயலர் இதன்போது குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோரும், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், மேலதிக கல்விப் பணிப்பாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.