பொதியிடல் தொடர்பான தொழில்நுட்பம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அறிவூட்டும் யுனிடோ நிறுவனத்துக்கு நன்றிகள் – கௌரவ ஆளுநர்

தரமான பொருட்களை உற்பத்தி செய்தாலும், அதனைப் பொதியிடுவது சந்தைப்படுத்துவதிலேயே அந்தப் பொருட்களுக்கான கேள்வி தங்கியுள்ளது. எனவே, இவை தொடர்பான தொழில்நுட்பம் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பிலும் உங்களை அறிவூட்டும் யுனிடோ நிறுவனத்துக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

ஐ.நா.வின் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் (யுனிடோ) ஏற்பாட்டில் உள்ளூர் தொழில்முயற்சியாளர்களுக்னான பயிற்சிப்பட்டறை திண்ணை ஹோட்டலில் இன்று புதன்கிழமை (23.07.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,

பொதியிடலில் புதுமை மற்றும் ஏற்றுமதி தயார்நிலை குறித்த இந்த முக்கியமான பயிற்சிப்பட்டறைக்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இன்றைய உலகளாவிய சந்தையில், பொதியிடல் என்பது ஒரு தொழில்நுட்ப சிந்தனை மட்டுமல்ல. இது எங்கள் தயாரிப்புக்களின் தரம், பாதுகாப்பு, கலாசாரம் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாகும். யாழ்ப்பாணத்திலிருந்து வரும் வாசனைப் பொருட்களாக இருந்தாலும், குருநாகலிலிருந்து வரும் ஆடைகளாக இருந்தாலும், கிழக்கு மாகாணத்திலிருந்து வரும் கனிமப் பொருட்களாக இருந்தாலும், எங்கள் பொருட்களை நாங்கள் எவ்வாறு வழங்குகிறோம் என்பது மிகவும் முக்கியமானது.

இலங்கை நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் நம்பகத்தன்மைக்காக மட்டுமல்லாமல், அவற்றின் பொதியிடலின் நுட்பத்துக்காகவும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படும் ஒரு எதிர்காலத்தை நாம் சிந்திப்போம்.

இங்குள்ள சாதாரணமான ஒருவரும் ஏற்றுமதியைச் செய்யும் அளவுக்கு ஏற்றுமதிக்கான பொறிமுறையை மாற்றியமைத்து – இலகுவாக்குவதற்கான முயற்சிகளை நாம் எடுத்துவருகின்றோம். விரைவில் அது எமக்குக் கைகூடும் என நினைக்கின்றோம். சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் இதனூடாக பயனடைவார்கள், என்றார் ஆளுநர்.