இன்றைய நவீனமயமாக்கப்பட்ட காலகட்டத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் இடையிலான சமத்துவத்தை அடைவதற்காக தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்களின் திறன்களை வளர்ப்பதற்கான ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையாக பெண்கள் வலுவூட்டல் மற்றும் பாலின மையமயமாக்கல் திறன் மேம்பாடானது முக்கியமானதொன்றாக கருதப்படுகின்றது.
அந்த வகையில் பாலின சமத்துவத்தை நிறுவனங்களின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் அனைத்திலும் உள்வாங்கிக் கொள்வதை உறுதிசெய்து பால்நிலைசார் பிரச்சனைகள், தலைமைத்துவம், வடமாகாணத்தில் பெண்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்கள், சவால்கள், அது சார்ந்த வழிமுறைகளை உள்ளடக்கியதான பயிற்சிப்பட்டறையின் முக்கியத்துவம் அளப்பெரிதே!
இதனைக் கருத்திற்கொண்டு குறித்த விடயங்கள் சார்ந்த பயிற்றுனர்களுக்கான பயிற்சிப்பட்டறை ஒன்றினை எமது அமைச்சானது ILO- Pave செயற்திட்டத்தின் கீழ் PASS Asia(Pvt)Ltd நிறுவனத்தினரால் முதற்கட்டமாக 07.06.2025 அன்று பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களது தலைமையில் திருமதி.மகேஸ்வரி பத்திரன (Co-Founder/Director/Lead Consultant/Master Trainer PASS asia) அவர்களை வளவாளராகக் கொண்டு நிருபா வர்ணகுலசிங்கம்(பொது முகாமையாளர் மற்றும் ஆலோசகர்)- PASS Asia(Pvt)Ltd அவர்களது பங்குபற்றுதலுடனும் வடக்கு மாகாணத்தைச் சார்ந்த அரச அலுவலர்கள் மற்றும் சிவில் சமூகமட்ட அமைப்புக்களைச் சேர்ந்த பொருத்தமான பிரதிநிதிகள் என 84 பங்குபற்றுனர்களை உள்ளடக்கி ஒரு நாள் பயிற்சிநெறியானது நடாத்தப்பட்டு அவர்களில் தெரிவு அடிப்படையில் 40 பயிற்றுனர்கள் பயிற்றுனர்களுக்கான பயிற்சிப்பட்டறைக்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தொடர்ந்து இப் பயிற்சிநெறியின் இரண்டாம் கட்டமாக ஐந்து நாள் வதிவடப்பயிற்சி நெறியானது 11.06.2025- 15.06.2025 வரையான காலப்பகுதியில் முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி அலகு, கிளிநொச்சியில் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களது வழிகாட்டுதலுடன் அமைச்சின் உதவிச்செயலாளர் ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களது தலைமையில் குறித்த வளவாளரைக் கொண்டு, தெரிவு செய்யப்பட்ட 40 பயிற்றுனர்களுக்கும் பயனுறுதி வாய்ந்த பயிற்றுநர்களுக்கான பயிற்சிப்பட்டறையானது நடாத்தப்பட்டு பயிற்சியின் நிறைவில் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை சிறப்பிற்குரியது.