தமிழர்களின் தனிப்பெரும் பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகை ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் 15 ஜனவரி 2019 அன்று வடக்கு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. ஆளுநர் அவர்கள் வடக்கு ஆளுநர் செயலகத்தின் பணிக்குழாமினருடன் பொங்கல் பொங்கி சம்பிரதாயபூர்வமாக தைப்பொங்கல் பண்டிகையினைக் கொண்டாடினார்.
இதன்போது பணிக்குழாமினரிடம் கருத்துத் தெரிவித்த ஆளுநர் அவர்கள் தற்போது வடக்கு மாகாணத்தில் ஆசிரியர்களாகவும் தாதியர்களாகவுமே பெண்கள் அதிகளவில் பணிபுரிந்து வருவதனை சுட்டிக்காட்டியதுடன் அந்த நிலைமையினை மாற்றி 2020, 2021 ஆம் ஆண்டளவில் வடக்கிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிப்பதற்கு தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டதோடு அதற்கான நடவடிக்கைகளை உடனடியாகவே ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் உள்ளிட்ட ஆளுநர் செயலகத்தின் பணிக்குழாமினர் இந்த பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை தைப்பொங்கலை முன்னிட்டு யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் வருடந்தோறும் ஏற்பாடு செய்யும் கலாசார பவனியையும் ஆளுநர் அவர்கள் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.