வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு நடத்திய வடக்கு மாகாண மஹா சிவராத்திரி தினம் 2025.02.26 ஆம் நாள் புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு கோவில்குளம், வவுனியா அருள்மிகு அகிலாண்டேச்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் முன்றலில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருவாளர் ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
மாலை 6.00 மணிக்கு முதலாம் சாமப்பூசையுடன் விரத நிகழ்வு ஆரம்பமானது. சிவராத்திரி தின கலைநிகழ்வுகளில் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் பிரதிப்பணிப்பாளருடன் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வவுனியா பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர், உதவிப்பிரதேச செயலாளர்இ, வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர், வவுனியா வடக்கு வலயக்கல்வி பிரதிப்பணிப்பாளர், வவுனியா வலயக்கல்வி பணிமனை அதிபர்கள் ஆகியோரும் கலந்து கொண்டதுடன் பண்பாட்டலுவல்கள் அலகின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள், ஆலய பரிபாலன சபையினர் என பலரும் கலந்து கொண்டனர்.
முதலாம் பூசை வழிபாடுகளுடன் ஆலய முன்றலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் விருந்தினர்களால் மங்கல விளக்கேற்றப்பட்டு இறைவணக்கத்துடன் வடக்கு மாகாண சிவராத்திரி தின கலை ஆற்றுகைகள் ஆரம்பமாகின. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக்குருக்கள் அவர்களினால் ஆசியுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து வவுனியா அகிலாண்டேஸ்வரி நுண்கலைக் கல்லூரி மாணவர்களது வரவேற்பு நடனம் நடைபெற்றது. பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருமதி.லா.நிருபராஷ் அவர்களால் வரவேற்புரையும், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திருவாளர் ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களால் வாழ்த்துரையும் வழங்கப்பட்டது.
பருத்தித்துறை, புலோலி பரத சிவாலய கலைமன்ற மாணவர்களின் தாருகாவனம் நடனம், பச்சிலைப்பள்ளி ஸ்ரீ நாட்டிய ஷேஷ்ரா நடனாலயா மாணவர்களின் சிவகீர்த்தனம் நடனம், வவுனியா அகிலாண்டேஸ்வரி நுண்கலைக்கல்லூரி மாணவர்களின் வயலின் இசை, வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரி மாணவர்களின் தில்லானா நடனம், வவுனியா வடக்கு கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன் அவர்களது ‘இந்து வழிபாட்டியல்’ சொற்பொழிவு, வவுனியா அகிலாண்டேஸ்வரி நுண்கலைக்கல்லூரி மாணவர்களின் கீர்த்தனை, வவுனியா ஏழிசை மிருதங்க நடனாலய மாணவர்களின் சிவகீர்த்தனம், வவுனியா நிருத்திய ஸ்ருதி நாட்டிய கலாலய மாணவர்களின் சிவ நடனம், வவுனியா நிருத்தியார்ப்பணா நாட்டிய கலாலய மாணவர்களின் நாட்டிய நடனம் ஆகிய கலைநிகழ்வுகள் பண்பாட்டலுவல்கள் அலகினால் ஒழுங்கமைக்கப்பட்டு சிறப்பாக அரங்கேற்றப்பட்டன. கலைநிகழ்வுகளை வழங்கிய மாணவர்களுக்கு பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் பங்குபற்றுனர்களால் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ஆலயத்தின் சிவராத்திரி தினத்தில் 2000 இற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு விரதத்திற்கான வழிபாட்டினை மேற்கொண்டதுடன் விரதத்தினை பூர்த்தி செய்வதற்கு ஒத்திசைவாக எம்மால் ஒழுங்கு செய்யப்பட்ட சிவனின் பெருமையும், மகத்துவத்தினையும் உள்ளடக்கிய பண்பாட்டியல் பொருந்திய கலைஆற்றுகைகளையும் கண்டுகளித்து இறையாசியினை பெற்றுச்சென்றனர்.