இலங்கையிலுள்ள 9 மகாணங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்களின் இயலளவை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக மாகாணங்களுக்கு இடையே புதிய விடயங்களை அறிந்து கொள்ளும் கள விஜயங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வடமாகாணத்தை சேர்ந்த பல அலுவலகங்களும் இவ்வாறான விஜயங்களை மேற்கொண்டு வருகின்றது.
வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அலுவலகங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களின் இயலளவை அதிகரிப்பதற்கான தேவை காலத்தின் கட்டாயம் ஆகும். ஏனென்றால் நிறுவனங்களின் வினைத்திறனான செயற்பாடுகள் தொடர்பில் ஆண்டுகள் தோறும் மேற்கொள்ளப்படும் அரச கணக்குகள் குழுவின் மதிப்பீடு, உற்பத்தித்திறன் மதிப்பீடு என்பன நிறுவனங்களின் செயற்திறனை மாத்திரமல்ல வடமாகாணத்தின் அடைவு மட்டத்தையும் புடம்போட்டு காட்டி நிற்கின்றன. கடந்த காலங்களில் வடமாகாணம் தேசிய ரீதியில் அதிகப்படியான விருதுகளை பெற்று முதல்நிலை மாகாணமாக திகழ்கிறது. இதனை தொடர்ந்து பேண வேண்டுமாயின் கடந்தகால அடைவு மட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இதற்கு உத்தியோகத்தர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படுவதன் மூலம் வினைத்திறன் மற்றும் விளைதிறன்களை அதிகரிக்கலாம்.
ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடுகையில் வடமாகாணத்திற்கு கிடைக்கும் வளங்கள் மிகக்குறைந்தளவானதே. அவ்வாறு கிடைக்கும் வளங்களை பயன்படுத்தி உத்தியோகத்தர்களுக்கு உரிய பயிற்சிகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வழங்க முடிகிறது. அவ்வாறு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் உத்தியோகத்தர்களின் இயலளவை அதிகரிப்பதற்கான பயிற்சிநெறிகள், களவிஜயங்கள் என்பன மாகாண மூலதன நிதியீட்டங்களினூடாகவே மேற்கொள்ள முடியும். மூலதன நிதியினூடாக குறித்த வேலைத்திட்டங்களைத் தயாரிக்கும் போது மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக வருடாந்தம் நிதி ஆணைக்குழுவால் வெளியிடப்படும் வழிகாட்டிகளுக்கு அமைவாக திட்டங்கள் தயாரிக்கப்பட்டு உரிய அனுமதிகளின் பின்னர் பாதீடு மூலம் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும். இதன் பின்னரேயே திட்டங்கள் நடப்பு ஆண்டிற்குள் நடைமுறைப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும்.