வடக்கு மாகாண நவராத்திரி விழா– 2024

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் நலன்புரிச்சங்கம், மாகாணக் கல்வித் திணைக்களத்தின் நலன்புரிச்சங்கம் மற்றும் யாழ் வலயக் கல்வி அலுவலக நலன்புரிச்சங்கம் என்பன இணைந்து நடாத்திய வடக்கு மாகாண நவராத்திரி விழா 2024.10.12 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கல்வி அமைச்சு வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி சிலை முன்றலில் நடைபெற்றது.

பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமான விஜயதசமி விழாவில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன. பூஜை நிகழ்வுகளைத் தொடர்ந்து கல்வி அமைச்சு செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களால் வித்தியாரம்பம் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் திரு.வேல் நந்தகுமார் அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு இடம்பெற்றது. கல்வி அமைச்சு, மாகாணக்கல்வித் திணைக்களம், வலயக்கல்வி அலுவலகம் ஆகியவற்றில் பணிபுரிகின்ற அலுவலர்களினதும், அலுவலர்களின் பிள்ளைகளினதும் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன. புஸ்பாஞ்சலி, கண்ணன் பாடல், தனிநடனம், கௌத்துவம், பேச்சு, வேப்பிலை நடனம், திருப்புகழ், பக்தி பாடல், கிருஸ்ணன் நடனம், குழுப்பாடல் போன்றன நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கலை நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கான பரிசில்கள் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பதவிநிலை அலுவலர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. கல்வி அமைச்சின் நலன்புரிச்சங்கத்தினால் நவராத்திரி விழாவை முன்னிட்டு அமைச்சு, திணைக்களம் மற்றும் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களிடையே நடாத்தப்பட்ட கோலப்போட்டி, மாலை கட்டுதல் போட்டி, தனிப்பாடல், குழுப்பாடல், பேச்சு, கவிதை ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற உத்தியோகத்தர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. நிறைவாக கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் திரு.எஸ்.சுபாஸ்கரன் அவர்களினது நன்றியுரையுடன் நவராத்திரி விழாவானது இனிதே நிறைவடைந்தது.