வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் இரண்டு வலயங்களின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் காங்கேசன்துரை மற்றும் கிளிநொச்சி பரந்தன் ஆகிய ஏற்றுமதி செயலாக்க வலயங்களின் நடவடிக்கைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டு வலயங்களும் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டு அங்குரார்பணம் செய்யப்பட்டன.
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், முதலீட்டு ஊகுவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோரால் ஏற்றுமதி செயலாக்க வலயத்தின் நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தில் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தும் நோக்குடன் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களினால் இதற்கான பத்திரம் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கக்கூடிய ஏற்றுமதி செயலாக்க வலயத்திற்கு கனேடிய இலங்கை வர்த்தக தொழிற்துறையினர் (anada srilanka Business Convention) முதலீட்டை மேற்கொள்ள முன்வந்துள்ளனர். இந்த வலயத்திற்கான ஆரம்பக்கட்ட காணி பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நூறு மில்லியன் அமெரிக்க டொலர் (100 MN USD) முதலீடு செய்யப்படுகிறது. அத்துடன் ஒன்று தசம் ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர் (1.5 BILL USD) முதலீட்டில் பாரிய செயற்றிட்டங்களையும் முன்னெடுக்க கனேடிய இலங்கை வர்த்தக தொழிற்துறையினர் தீர்மானித்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் சுகாதார மேம்பாடு, முதியோர் இல்ல அபிவிருத்தி, தொழிற்துறை, தொழில்நுட்பவியல், சிறு வர்த்தகத் துறை மேம்பாடு, வரிவிலக்களிக்கப்பட்ட அங்காடி தொகுதி, சுற்றுலாத்துறை அபிவிருத்தி போன்ற பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள முழுமைப்படுத்தப்பட்ட அரச தனியார் முதலீட்டு திட்டமாக இது அமையவுள்ளது. இந்த திட்டத்தில் கனேடிய இலங்கை வர்த்தக தொழிற்துறையினருடன் (Canada Sri Lanka Business Conversation) இலங்கை முதலீட்டு சபையும் கைகோர்த்துள்ளது .
இதேவேளை, கிளிநொச்சி பரந்தனில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி செயலாக்க வலயத்தின் அனைத்து செயற்பாடுகளும் இலங்கை முதலீட்டு சபையினால் உள்ளூர் ஏற்றுமதி, உற்பத்தி துறையினரை கொண்டு நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வலயத்திலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி செயலாக்க வலயங்களின் ஊடாக வடக்கு மாகாணத்தில் காணப்படும் தொழில் இன்மை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும், பொருளாதார மேம்பாட்டிற்கு உந்து சக்தியாக இது அமையும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தெரிவிக்கின்றார். மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் வடக்கிற்கான விஜயத்தின் போது வேலையற்ற பட்டதாரிகள், இளைஞர், யுவதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கௌரவ ஆளுநர் அவர்கள் தெரிவிக்கின்றார். மேலும் வடக்கு மாகாணத்திலுள்ள ஆளணி வெற்றிடங்களை பட்டதாரிகள் , டிப்ளோமாதாரிகளை கொண்டு நிரப்புவதற்கான அனுமதி கிடைத்துள்ள போதிலும், தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு அமைய ஆட்சேர்ப்பு நடவடிக்கை தாமதமாகியுள்ளதாகவும் கௌரவ ஆளுநர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.