தெய்வீக சுகானுபவம் – 10

நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவத்தை முன்னிட்டு யாழ் இந்திய துணைத்தூதரகத்துடன், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு இணைந்து நடாத்திய தெய்வீக சுகானுபவம் – 10 நிகழ்வானது 2024.08.18 ஞாயிற்றுக்கிழமை மாலை 7மணிக்கு யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள சங்கிலியன் தோப்பு வளாகத்தில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்.இந்திய துணைத்தூதுவர் கௌரவ சாய்முரளி அவர்களும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.இ.இளங்கோவன்   அவர்களும்; கலந்து சிறப்பித்திருந்தனர். இவர்களுடன் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதம கணக்காளர் மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலை ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள், பொதுமக்கள்  எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வு மேடைக்கு அழைத்து வரப்பட்டதுடன் மங்கல விளக்கேற்றி நிகழ்வானது ஆரம்பிக்கப்பட்டது.  நல்லூர் சாரங்கம் இசைமன்றத்தினரின் தமிழ்த்தாய் வாழ்த்து இசையும், கைதடி இயல் சேஷ்த்ரா மன்றத்தினரின் வரவேற்பு நடனமும் ஆரம்ப நிகழ்வாக அமைந்திருந்தன.

அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அவர்களின் தலைமையுரை, பிரதம செயலாளர் அவர்களது சிறப்பு விருந்தினர் உரை, யாழ்-இந்திய துணைத்தூதுவர் அவர்களின் பிரதம விருந்தினர் உரை என்பன இடம்பெற்றன. இணுவையூ+ர் குமரநர்த்தனாலயம் மாணவர்களது கிராமிய கலைக்கதம்ப நடனநிகழ்வும் மேடையினை அலங்கரித்தது.

அதனைத்தொடர்ந்து இந்தியாவின் புகழ்பூத்த கர்நாடக இசைக்கலைஞர் கலாநிதி எஸ்.சௌம்யா மற்றும் அவருடைய குழுவினரான மிருதங்க வித்துவான்  பிரவீன் ஸ்பர்ஷ், வயலின் வித்துவான் சாருமதி ரகுராம் அவர்கள் இணைந்து வழங்கிய தெய்வீக சுகானுபவம்-10 இசைக்கச்சேரி அனைவரினதும் செவிக்கு விருந்தாய் அமைந்தது. விருந்தினர்களால் இசைக்கச்சேரியினை வழங்கிய கலைஞர்களுக்கான கௌரவம் வழங்கப்பட்டது.                                                                                                                                                                                                                                     நிகழ்வின் நிறைவாக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் லா.நிருபராஷ் அவர்களினால் நன்றியுரை வழங்கப்பட்டதுடன் நிகழ்வானது இரவு 11.00 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது.