முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நட்டாங்கண்டல் விவசாய போதனாசிரியர் பிரிவில் முன்று முறிப்பு கிராமத்தில் நீல வெட்டியர் குளம் வயல்வெளியில் பரசூட் முறையாலான நெற்செய்கையின் அறுவடை விழாவானது 2024.07.04 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு நட்டாங்கண்டல் விவசாய போதனாசிரியர் சண்முகராசா சரண்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் யாமினி சசீலன் அவர்களும், சிறப்பு விருந்தினராக பாண்டியன்குள கமநல சேவை நிலையத்தின் பெரும் போக உத்தியோகத்தர், முன்று முறிப்பு கிராம அலுவலகர், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர், ஆகியோரும் விவசாய திணைக்களத்தின் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், தொழினுட்ப உதவியாளர்கள், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில் நெற் செய்கையின் செலவீனத்தை குறைத்து விளைச்சலை அதிகரிக்க விவசாயிகள் பரசூட் முறை மற்றும் இயந்திரம் மூலம் நாற்றுநடுகை முறைக்கு மாற வேண்டும் என வலியுறுத்தியதோடு எதிர் வரும் காலத்தில் ஏனைய விவசாயிகளும் இவ்வாறான முறை மூலம் நெற்செய்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இம்முறைகள் மூலம் நெற்செய்கையில் ஈடுபட்ட விவசாயிக்கும் வழிப்படுத்திய நட்டாங்கண்டல் விவசாய போதனாசியருக்கும் ஏனைய விவசாய போதனாசிரியர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட நெல்லுக்கான பயிர் பாடவிதான உத்தியோகத்தர் கோ.இளங்கீரன் இயந்திர நாற்று நடுகை, பரசூட் முறை, மற்றும் வீசி விதைப்பு தொடர்பான பயிராக்கவியல் நடவடிக்கைகளையும், இவ் மூன்று முறைகளிலும் உற்பத்தி செலவு தொடர்பாக தெளிவாக விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். மற்றும் விவசாயிகளின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
விருந்தினர் அனைவரினதும் கருத்துக்களின் பின்னர் வயல்விழா நிகழ்வானது களவிஜயம் மற்றும் அறுவடையுடன் 12.30 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.