யூன் 19, 2024 அன்று, வவுனியா மாவட்டச் செயலகத்திலும் மற்றும் யூன் 20, 2024 அன்று, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திலும் ஊராட்சி முற்றக் (Townhall) கூட்டங்கள் நடைபெற்றன. பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரச அதிகாரிகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாண சபை மற்றும் அந்தந்த மாவட்ட செயலகங்களின் இணைத் தலைமையில் இக்கூட்டங்கள் நடாத்தப்பட்டன.
வவுனியாவில் நடைபெற்ற கூட்டம் வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சின் உதவிச்செயலாளர் திருமதி.ச.லதுமீரா அவர்கள் மற்றும் வவுனியா மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் அவர்களின் இணைத் தலைமையிலும் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டம் வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட உதவி அரசாங்க அதிபர் அவர்களின் இணைத் தலைமையிலும் நடைபெற்றது.
இக் கூட்டங்களின் பங்கு பற்றிய மகளிர் குழுக்களின் பிரதிநிதிகள் நேர்த்தியான ஓர் ஒழுங்கு முறைப்படி பிரச்சனைகள் தொடர்பான முன்வைப்புக்களை மேற்கொண்டனர். இம் முறை பிரச்சனைகளுக்கான தீர்வுகளை உடன் எட்டுவதற்காக நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் தீர்மானம் எடுக்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரச அதிகாரிகள், ஊராட்சி முற்றங்களுடன் இணைந்திருந்தமை சிறப்பம்சமாகும்.