சர்வதேச மகளிர் தினம் 2023

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் யாழ் இந்திய துணைத் தூதரகமும் இணைந்து ‘பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் 15.03.2023 அன்று காலை 09.00 மணி தொடக்கம் பிற்பகல் 05.30 மணி வரை யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வானது மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி .ரூபினி வரதலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கௌரவ திரு. ஜீவன் தியாகராஜா ஆளுநர், வடக்கு மாகாணம் அவர்களும் சிறப்பு விருந்தினராக ஸ்ரீமான் ராகேஸ் நட்ராஜ், யாழ் இந்திய துணைத்தூதுவர் அவர்களும்; கலந்து சிறப்பித்தனர்.

ஆரம்ப நிகழ்வாக வடக்கு மாகாண பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துமுகமாகவும் அவர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டும்; வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் தொழில்துறைத் திணைக்களமும் இணைந்து வர்த்தகக் கண்காட்சியும் விற்பனையும் அடங்கிய காட்சிக்கூடமானது ஆரம்பிக்கப்பட்டு மாலை 05.30 மணி வரை நடைபெற்றது.

தொடர்ந்து தமிழ் பண்பாட்டினை பிரதிபலிக்கும் வரவேற்பு நடனம் இடம்பெற்று இந் நிகழ்வினை தலைமையேற்று நடாத்திய மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி. ரூபினி வரதலிங்கம் அவர்கள் வரவேற்புரையினையும்; தலைமையுரையையும் வழங்கி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர் உரையினை ஸ்ரீமான் ராகேஸ் நட்ராஜ், யாழ் இந்திய துணைத்தூதுவர் அவர்கள் வழங்கினார்.

மேலும் கௌரவ திரு. ஜீவன் தியாகராஜா ஆளுநர், வடக்குமாணம் அவர்களின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி திரையில் காணொளியாகக் காண்பிக்கப்பட்டது.

திருமதி. கவிதா ஜவஹர் அவர்களின் ஆளுமைப்படுத்தல் உரையும், அதனைத் தொடர்ந்து ‘பெண் இறைமை’ எனும் தொனிப்பொருளில் பெண் விடுதலை தொடர்பான விழிப்புணர்வு நாட்டிய நாடகம் மேலும் திருமதி. கௌரி பொன்னையா அவர்களின் சிறப்புரையும் மற்றும் திருமதி. அனந்தி சசிதரன் அவர்களினால் அனுபவப் பகிர்வுடன் சிறப்புரை வழங்கப்பட்டு நிகழ்வு சிறப்பிக்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் சமத்தவ சிந்தனை, சிறந்த செயலாற்றுகை மற்றும் சமூக மாற்றத்திற்கு பல்வேறுபட்ட துறைகளில் புதிய வடிவங்களை முன்னெடுத்துச் செல்கின்ற வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 08 சிறந்த பெண் சாதனையாளர்களுக்கும் 15 பெண் தொழில் முயற்சியாளர்களுக்கும் சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன் பெண்களின் சமூக பொருளாதார மேம்பாட்டை முன்னிலைப்படுத்தல் எனும் கருப்பொருளை சித்தரிக்கும் சிறந்த குறும்படம் மற்றும் புகைப்படப்போட்டியில் தெரிவானவர்களுக்கு பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் மார்ச் 08 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவதற்காக மகளிர் சிக்கன கடனுதவுக் கூட்டுறவுச் சங்கங்களினூடாக 2019ம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தினால் செயல்படுத்தப்பட்டு வருகின்ற மகளிர் மகுடம் எனும் கடன் திட்டத்தினூடாக மகளிருக்கான புதிய சுயமுயற்சி அல்லது சுயதொழில் விரிவாக்கல் கடன் இம்முறையும் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 5 சங்கங்களுக்கும் தலா ரூபா. 5 லட்சம் காசோலையாக வழங்கி வைக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்திலுள்ள திருநர் எதிர் நோக்குகின்ற பல்வேறு பிரச்சனைகள் அடங்கிய மகஜர் ஒன்று திருநர்களை பிரதிநிதித்துவம் செய்யும் குழுவினால் கௌரவ ஆளுநர், வடக்கு மாகாணம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

மகளிர் விவகார அமைச்சினால் பால் நிலை சார் வன்முறையால் பாதிக்கப்பட்வர்களுக்கான உடனடித்தேவையினை பூர்த்தி செய்கின்ற பொருட்கள் அடங்கிய பொதியானது மாவட்ட மற்றும் பிரதேச வைத்தியசாலைகளுக்கு வழங்குவதற்கேதுவாக மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

இறுதியாக அமைச்சின் உதவிச் செயலாளரினால் நன்றியுரை வழங்கப்பட்டு நிகழ்வானது இனிதே நிறைவடைந்தது