வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நூல் வெளியீடு

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் ,ளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பாசையூர் அண்ணாவியார் முடியப்பு அருட்பிரகாசம் அவர்களின் இரு கூத்துக்கள், கூத்திசை நாடகம், இலங்கை வேந்தன் இராவணேஸ்வரன் மற்றும் சிலம்பரசி நாட்டுக்கூத்துக்கள் ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா பாசையூர் புனித அந்தோனியார் பங்கு மண்டபத்தில் 14 பெப்பிரவரி 2021 அன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு யாழ் மாவட்ட பதில் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திரு.மா.அருட்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் அவர்களும், கௌரவ விருந்தினராக அருட்திரு ம. ஜெறோ செல்வநாயகம் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
பாசையூர் கலைஞர்கள் விருந்தினர்களை வரவேற்றனர். வேலணை பிரதேச கலாசார உத்தியோகத்தர் திருமதி. மேசி சுஜந்தினியின் வரவேற்புரையுடன் நிகழ்வு ஆரம்பமானது. யாழ்ப்பாண திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குனர் திரு.யோ.யோன்சன் ராஜ்குமார் அவர்கள் நூல்களின் தொகுப்புரையாற்றினார். மூன்று நூல்களின் மதிப்பீட்டுரையை முறையே கலாபூஷணம் செ.யோசப்பாலா அவர்களும், அருட்திரு. பாலதாஸ் பிறாயன் அவர்களும், ஆசிரியர் திரு.இ.ஜெயகாந்தன் அவர்களும் நிகழ்த்தினார்கள். விருந்தினர்களின் சிறப்புரையைத் தொடர்ந்து நூல்களுக்குரிய கலைஞர் கௌரவிக்கப்பட்டார். இப்பிரதேச நாட்டுக்கூத்து கலைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.