வட மாகாண  கலாச்சார திணைக்களத்தினால் நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால்  2021 நவம்பர் மாதம் 4 நூல்கள் வெளியிடப்பட்டன. வெளியீட்டு நிகழ்வுகள் வட மாகாண கல்வி அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றன.

பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர்    திருமதி சுஜீவா சிவதாஸ் அவர்கள் தலைமையில்  நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.  சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

பேராசிரியர் நா. சண்முகலிங்கன் அவர்கள் மீள்பதிப்பித்த பேராசிரியர்.ப.சந்திரசேகரம் அவர்களின் “கல்வித்தத்துவம்” நூல் வெளியீட்டு விழா 22 நவம்பர் 2021 அன்று பி.ப 3.00 மணிக்கு நடைபெற்றது.

இந்நூலுக்கான வெளியீட்டுரையை சமூகவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.இ.இராஜேஸ்கண்ணன்  அவர்களும், அறிமுகவுரையை கல்வியல்துறை தலைவர் கலாநிதி(திருமதி) ஜெயலக்சுமி இராசநாயகம் அவர்களும் நிகழ்த்தினார்கள்.

பேராசிரியர்.நா. சண்முகலிங்கன் அவர்கள் மீள்பதிப்பித்த வடகோவை சபாபதி நாவலரின் “திராவிடப்பிரகாசிகை” மற்றும் தெல்லிப்பளை வ. குமாரசாமி அவர்கள் தொகுத்த “கதிரைமலைப்பள்ளு” ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா கல்வி அமைச்சின் மண்டபத்தில் 15 நவம்பர் 2021  அன்று பி.ப 3.00 மணிக்கு நடைபெற்றது.

 “திராவிடப்பிரகாசிகை” நூலுக்கான வெளியீட்டுரையை தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஈஸ்வரநாதபிள்ளை குமரன் அவர்களும், அறிமுகவுரையை பேராசிரியர் கலாநிதி அ.சண்முகதாஸ் அவர்களும் நிகழ்த்தினார்கள். தொடர்ந்து “கதிரைமலைப்பள்ளு” நூலுக்கான வெளியீட்டுரையை சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்(தமிழ்) பா.மகாலிங்கசிவம் அவர்களும், அறிமுகவுரையை பேராசிரியர் கலாநிதி சி.சிவலிங்கராஜா அவர்களும் நிகழ்த்தினார்கள்.

எழுத்தாளர் சாந்தன் அவர்களின்  “சாந்தனின் படைப்புலகம் “ நூல் வெளியீட்டு விழா கல்வி அமைச்சின் மண்டபத்தில் 01 நவம்பர் 2021 அன்று பி.ப 3.00 மணிக்கு நடைபெற்றது.

இந்நூலுக்கான வெளியீட்டுரையை கலிஞர் சோ.பத்மநாதன் அவர்களும், அறிமுகவுரையை பேராசிரியர் கலாநிதி நா. சண்முகலிங்கன் அவர்களும் நிகழ்த்தினார்கள்.

நிகழ்வுகள் நூலாசிரியர்களின் நன்றியுரைகளுடன் நிறைவடைந்தன.