புதுவருடத்தில் அரச சேவை சத்திய பிரமாணம் செய்து விசேட நிகழ்ச்சித் திட்டத்துடன் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

வடமாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம், மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சும், மாகாண சுகாதார சேவைகள் பணிமனையும் இணைந்து இன்று 01.01.2020 காலை 9.30 மணிக்கு சுகாதார அமைச்சின் முன்றலில் சகல அலுவலர்களின் பங்குபற்றுதலோடு புதுவருடத்திற்கான சத்தியபிரமாணம் நிகழ்வும், அதனை தொடர்ந்து விசேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இந்நிகழ்வு அமைச்சின் செயலாளர் திரு க.தெய்வேந்திரம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது, அவர் தலைமையுரை ஆற்றுகையில், இப்புத்தாண்டு நன்னாளில் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான இனிய புதுவருட நல்வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொண்டு 2020ம் ஆண்டானது நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமானதும் சந்தோசமானதுமான சுபீட்சத்தை வாரி வழங்கவேண்டும் என்றும் மலர்ந்துள்ள புதுவருடத்திலே மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைதரத்தை மேம்படுத்தும் நோக்குடன் சகல செயற்பாடுகளையும், இலக்குகளையும் அடைவதற்கு எம்மை முழுமனதாக அர்ப்பணித்து அவற்றை திருப்திகரமாக நிறைவேற்றுவதற்காக எமது கடமைகளை குழுவாக செயற்பட்டு நிறைவேற்றுவோம் என கூறினார்,

மேலும், சிறப்பாக வடமாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் துறைகளின் இலக்குகளை அடைவதற்காக உன்னத பணிபுரிவோம் எனவும் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் பொருளாதாரம் என்பனவற்றை மேலோங்கச் செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் எனவும் கூறினார், அத்தோடு இப்புத்தாண்டு கடந்த வருடத்தை போல ஆரோக்கியமானதாகவும் பிரகாசமாகவும் அமையட்டும் எனவும் கூறினார்.

அதனை தொடர்ந்து பேராசிரியர் நடராஜசுந்தரம் அவர்களினால் நேர முகாமைத்துவம் நேர்மய எண்ணங்கள் தொடர்பான சிறப்புரையும் நடைபெற்றது.